பக்கம் எண் :

380

     

378. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி

     சங்ககாலச் சோழன் காலத்தில் வடபுலத்திருந்து வடுகரும் தென்
புலததிலிருந்து பரதவரும் தமிழகத்திற்குட் புகுந்து குறும்பு செய்து வந்தனர்.
இவ்வடுகரே இடைக்காலப் பல்லவ பாண்டியர் காலத்திற் சீரழிந்து
வலியழிந்தொழிந்த களப்பிரராவர். தென்பரதவர் தென்னாட்டுக் கடற்கரையில்
தங்கிக் குறும்புசெய்தனர் இவர்கள் இடைக்காலப் பாண்டியர் காலத்தில்
வலியழிந்தொடுங்கினர். சங்ககாலத்தில் வடுகரும் பரதரும் குறும்பு செய்வான்
தலைதூக்கும்போதெல்லாம் ஒடுக்கி வந்தவருள் சோழவேந்தரும் சிறந்து
நின்றனர். இக் காலத்தே மேலைக் கடற்கரைப் குறும்பு செய்தனர். இன்றும்
மேலைக்கடற்கரையில் தென் கன்னட சில்லாவில் கடம்பத்தீவு என ஒரு தீவு
இருந்து பண்டைய கடம்பரை நினைவு கூர்வித்து நிற்கிறது. அவர்களை இமய
வரம்பன் நெடுஞ்சேரலாதனும் சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு
குட்டுவனும் கடற்போருடற்றி வென்றொடுக்கினர். இங்ஙனம் சங்ககாலத்தில்
தமிழகத்தின் வடக்கில் வடுகரும், தெற்கில் பரதவரும், மேற்கில் கடம்பரும்
அடிக்கடி வந்து அரம்பு செய்த செயல்களைச் சங்கத்தொகை நூல்கள்
குறிக்கின்றன. வடபுலத்திலிருந்து வடுகராகிய களப்பிரேயன்றி மோரியரும்
பிறரும் வந்தன ராயினும், அவர்கள் தொடக்கத்திலேயே தலைமடங்கி
நின்றொழிந்தனர். களப்பிரர்மட்டில்இடைக்காலத்திற்றான் வடபுலத்துப்
புத்தரும், சமணரும் தமிழகத் திற் புகுந்து இடம்பெறுவாராயினர். செந்தமிழின்
செல்வாக்குக்குக் கேடுண்டாகத்தொடங்கியதும் அவர்கள் காலத்தேயாகும்.
செந்தமிழ்ச் செல்வரிடையும் வேந்தரிடையும் புறஞ்சுவர் கோலஞ்செய்யும்
புன்மையுண்டாகத் தொடங்கியது அக் களப்பரர் காலத்தெயாம் எனப்து
மனங்கொள்ளற்பாற்று. அந்நாளில் களப்பிரரான வடவடுகரையும்
தென்பரதவரையும் ஒடுக்கிய செயலில் ஒருகால் சோழன் செருப்பாழி யெறிந்த
இளம்பெருஞ்சென்னி (சேட்சென்னி) வென்றி மேம்பட்டு விளங்கினான்.
அவனை ஆசிரியர் ஊன்பொதி பசுங்குடையார் காணச் சென்றார். அவன்
அவர்க்குப் பல அணிகலன்களையும் செல்வங்களையும் நல்கினான்.
அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றதினர் பகிர்ந்து கொண்டு
தாம்தாம் அணிந்து மகிழ்ந்தனர். இம்மகிழ்ச்சியைக் கிணைப்பொருநன்
ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண்
தென்பரதவரை, மிடலழித்து வடவடுகரது வாள்வன்மையைக் கெடுத்து
மேம்பட்ட சோழனுடைய வெண்சுதை மாடத்தின் நெடுநகர் முற்றத்தே
நின்று பொருநன் அவனுடைய வஞ்சித் துறையைப் பாடி நின்றானாக,
பொருநர்க்கெனச் சமைக்கப் படாது அரசர்க்கும் செல்வர்க்குமாக
அமைக்கப்பெற்றனவும் போரிற் பகைவர் பாற் கொண்டனவுமாகிய
அணிகலன்கள் பல வழங்கினன்; அவற்றுள் விரலில் அணிவனவற்றைச்
செவியிலும், செவிக்குரியவற்றை விரலிலும், அரைக்குரியவற்றைக் கழுத்திலும்,
கழித்தணியை இடையிலும் வகை தெரியாது அப் பொருநனுடைய சுற்றத்தினர்
அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினார்; அவர் செய்கை,
பண்டு இராமனுடன் போந்த சீதையை இராவணன்தூக்கிச் சென்றபோது அவள்
கழற்றியெறிற்த அணிகலன்களைக் குரக்கினம் அணிந்து கொண்டது போல
இருந்தது; அவர்கள் கொண்டிருந்த வறுமைத் துன்பமும் மறைந்து
போயிற்றென்று கூறியுள்ளார்.