| பகைவர்களுக்கு நினைவுக்கெட்டாத சேய்மையிலுள்ளவனாவன்; நட்பு எதிர்ந்தோர்க்கு அங்கை நண்மையன் - நட்புக்கொண்டு நேர்படுபவருக்கு அரவது உள்ளங்கைபோல நெருங்கிய அண்மையனாவன்; வல்வேற் சாத்தன் நல்லிசை யல்லது - வலிய வேலையிடைய சாத்தனது நல்ல புகழையன்றி; ..........சிலைத்தார்ப் பிள்ளையஞ்சிறார ் - வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த பிள்ளைப்பருவத்தையுடைய சிறுவர்கள்; அன்ன னாகன்மாறு - அத்தன்மையனாதலால்; இந்நிலம் இலம்படு காலையாயினும் - இந்நிலவுலகத்து மக்கள் வறுமையுற்று வருந்துங்காலம் வந்தபோதிலும்; பூத்த என் கடும்பு புலம்பல் போயின்று - பொற்பூவும் பொன்மாலையும் கொண்டு மகிழும் என் சுற்றத்தார் வருந்துதல் இலாயினர்; எ - று.
தென்கடல் முத்துக்கும் வடமலை சந்தனத்துக்கும் பெயர் பெற்றவையாதலின், அவற்றை விதந்தோதினார். வடமலை யென்றது இமய மலையை; வேங்கடலையுமாம். வடவர் தமிழ்நாட்டிற்குள் வந்தபோது ஒருவகைச் சந்தனங் கொணர்ந்தனரென்ப; வடிவர் தந்த வான்கேழ் சந்தம் (அகம். 340) என்பது காண்க. போர்செய்து பெற்ற வென்றி யென்பது விறல் வென்றி யெனப்பட்டது. பாண்டிவேந்தர்க்குத் துணையாய் அவன் தானைக்குத் தலைமை தாங்குபவன் என்றற்குத் தென்னவர் வயமறவன் என்றார். கடலில் மழைபெய்யுங்கால் முத்தீனும் நத்தைகள் நீர்மேல் வந்து தம் ஓட்டைத் திறந்து கொண்டிருக்குமென்றும், ஒரு துளி தன் ஓட்டிற்குள் வீழ்ந்ததும், ஓட்டை மூடிக்கொண்டு நீர்க்குட் சென்று விடுமென்றும், அதுவே பின்பு முத்தாகு மென்றும் பண்டையோர் கருதியிருந்தனராதலின், அக்கருத்தே தோன்ற, மிசைப் பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து, என்றார். ஆகுமென்னும் உம்மை உந்தாயிற்று. நாஞ்சில், பொதியின் மலைத் தொடர்களுன் ஒன்று; இப்போது இது மருத்துமலை என வழங்குகிறது; முன்னாளில் இது நஞ்சிலாமலை என வழங்கிற்றென்பர். இது நாஞ்சில் நாட்டில் நாகர்கோயிலுக்கும் தென் குமரிக்கும் இடையில் உளது. இம் மலைக்கு வடகிழக்கில் உள்ள வள்ளியூர் இவ்வள்ளுவரது ஊராகலாம் என்பர். அவ்வூரில் பண்டைநாளில் இனியகோட்டையிருந்ததெனக் கல்வெட்டு (A. R. No. 254 of 1927-28) கூறுகிறது. உயர் சிமைய வுழாஅ நாஞ்சில் (புறம். 139) என்று பிறரும் கூறுதல் காண்க. துப்பு, வலி; ஈண்டு அதனுடைமை காரணமாகக் கொள்ளும் பகைமை மேனின்றது. பகைமைகொண்டு போரெதிர்ந்தோர் பின்பு பகைமையின்றி அன்பு காட்டி யொழுகினா ராயினும், பழம்பகைநட்பாதல் இல் (பழ. 296) என்ற முதுமொழிகொண்டு அவரை நெருங்கவிடாத நேர்மை யுடையனென்றற்கு, துப்பெதிர் தார்க்கே யுள்ளாச் சேய்மையன், எனவும் உண்மையன் புடையார்க்குக் கைபோன் மிக்க வுதவியினைச் செய்பவனென்றற்கு, நட்பெதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் எனவும் எடுத்துரைத்தார். நணிமை, நண்மையென வந்தது. சாத்தன், இவனை வள்ளுவனென்றோ, அவன். முன்னோருள் ஒருவ னென்றோ இன்னாரென அறிய இயலவில்லை. மறவனும், பொருனனும், சேய்மையனும் நண்மையனுமாகிய சாத்தன் என இயையும். புலம்பு, ஆதரிப்பாரின்றித் தனிமையுற்று வருந்தும் வருத்தம். இலம்படுகாலை - வற்கடம். பூத்தம் செல்வத்தாற் சிறந்திருத்தல். |