பக்கம் எண் :

390

     

     விளக்கம்: இயன்மொழியாவது இன்னதென முன்னர்க் கூறினாம்.
திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரைக் கண்ட பிற்காலத்தார் இந் நாஞ்சில்
வள்ளுவனைக் காணாதொழிந்தனர்; கண்டிருப்பின் பிறந்தவரென்றும்
பொய்க்கதைகள் புனைந்து பொய் கூறியிருக்கமாட்டார்கள். நாஞ்சில்
மலைக்குத் தலைவனாகிய வள்ளுவனும், திருக்குறளாசிரியராகிய
திருவள்ளுவனாரும் வள்ளுவன் என்ற சிறப் புப்பெயர் கொண்டு
விளங்கியவராவர். இவர்கள் வழிவந்தோர் வள்ளுவர்களாய் இடைக்காலத்தே
அரச காரியம் பார்த்துவந்த மேலோராவர். மலையாளசில்லாவைச் சேர்ந்த
பொன்னானிப்பகுதியிலுள்ள சுகவுரத்துக் கல்வெட்டொன்று, “சொகிரத்துப்
பருடையாரும்...இராயசேகரராயின வள்ளுவரும் கூடிச் செய்த கச்சமாவது”
(S.I. Ins. Vol. V No.772) என வள்ளுவர்களை “இராயசேகரர்” என்பது
இக்கருத்தை வற்புறுத்தும். இப் பாட்டு இடையே பெரிதும் சிதைந்துள்ளது.
“தென்னவர் வய மறவன்” என்றும், “நாஞ்சிற் பொருநன்” என்றும், வருவன
இடைக்கால வள்ளுவர்கள் “இராயசேகரராய்” இருந்ததற்குத் தக்க சான்றாகும்.
துப்பெதிர்ந்தோர், பகைத்தெழுந்தோர்: “கடுமான் கோதை துப்பெதிர்ந்தெழுந்த
நெடுமொழி மன்னர்” (புற்ம. 54) எனவும், “துப்பி னெவனாவர் மற்கொல்
துயர்வரவு, நட்பினுள் ஆற்றுபவர்” (குறள். 1165) எனவும் வருதல் காண்க.
வள்ளுவனது கொடைநலத்தைச் சிறப்பித் துரைப்பாராய், “இந்நிலம் இலம்படு
காலையாயினும் பூத்தவென் கடும்பு புலம்பல் போயின்று” என்று கூறினார்.
மறவன், பொருநன், சேய்மையன், நண்மையன், வல்வேற் சாத்தன் என்றலின்,
இப் பாட்டுடைத்தலைவன் நாஞ்சில் வள்ளுவன் சாத்தன் என்று பெயர்
கூறப்படுவன்போலும்.

381. கரும்பனூர்கிழான்

     கரும்பனூர் என்பது தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத்
திலுள்ள தோரூர். திருக்கழுக்குன்றத்துக் கல்வேட்டொன்று, “கரும்பனூர்
வணிகன் ஆதித்த” (A.R. No. 76 of 1932-3) னென்பவனைக் குறிக்கின்றது.
இவனை ஒருகால் நன்னாகனாரென்னும், சான்றோர் கிணைவரும் பாணருமாகிய
சுற்றத்தாருடன் கரும்பனூர் சென்று கண்டார். அவன் இவர்களை வரவேற்று
நல்விருந்து செய்து கிறப்பித்தான். அங்கே அவர்கள் சின்னாள் தங்கியிருந்து
பின்பொருநாள் தம்மூர் போதற்கு அவன்பால் விடைவேண்டினர். அவன்
சான்றோர் பிரிவைப் பெரிதும் விரும்பானாய் அஞ்சிச் சின்னாள் தன்பால்
இருக்க வைத்தான். இதற்கிடையே நாட்டில் வறனுண்டாயிற்று; கோடையும்
மிகுந்தது. மீளவும் ஒருநாள் அவர் விடை வேண்டவே, அவர்க்கும் அவர்
சுற்றத்தார்க்கும் மிக்க செல்வத்தை நல்கி நீவிர் நாடுவறங்கூர நின்று வருத்தும்
கோடை நீங்கிய காலத்து ஈயாத புல்லராகிய வேந்தர் மனைக்குச்சென்று
வருந்திப் பாடித் துன்புறல் வேண்டா; எம்பால் வருக;  யாம்  நுமக்கு
வேண்டுவன  நல்கிப்  போற்றுவேம்;  நீவிர்   சேய்மையிலிருப்பினும்
இந்நாட்டிலிருப்பினும் கவலையுறாது; வருக; அக்காலை யாம் செய்வதனை
இது கொண்டறிந்து கொள்க” என்றான். அவன் அறத்துறையம்பிபோல்
விளங்கு வதனை இப் பாட்டின்கண் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.