| அருவந்தையின் செவியிற் பட்டது. அருட்கடலாகிய அவன் உள்ளம் பாட்டிற் குருகிற்று. அவரையுடனே தன்பால் வருவித்து, அழுக்கேறிப் பீறிக்கிடந்த அவரது உடையைக் களைந்து வேறொரு வெள்ளாடை தந்து உடுப்பித்து இனிய உணவு தந்து பசிகளைந்தான். அது கண்டு கழிபேரு வகையால் தம்மை மறந்து இன்புற்ற கல்லாடனார் இப்பாட்டைப் பாடி இதன்கண், காவிரி பாயும் அம்பர் கிழவனான அருவந்தை, புல்லியென் பானுக்குரிய வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவர். சென்னைக்கு வடகிழக்கிலுள்ள பொன்னேரிக் கண்மையில் புகைவண்டி நிலையமாய் நிற்கும் மீஞ்சூர் பண்டை நாளில் கல்லாடமென்று வழங்கிற்று. (செந். செல்வி Vol. 23 பக். 113-22) இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலையும் மலையமான் திருமுடிச் காரியையும், சோழநாட்டு அம்பர் அருவந்தை, பொறையாற்றுக்கிழான் என்பாரையும், தொண்டைநாட்டுத் தொண்டையரையும், வேங்கடத்துக்குரிய புல்லி யென்பானையும் பாடியிருத்தலால், இவர் தமிழ் முழுதறிந்த தண்டமிழாசிரியரென்பது ஒருதலையாம் இவர், தம் பாட்டுக்களில் தொண்டை நாட்டு வேங்கடத்தையும் அதற்குரிய புல்லியென் பானையும் பன்முறை பாடியிருப்பதுகொண்டு இவர் தொண்டைநாட்டுக் குரியரென்பது ஒருவாறு கருதப்படுமாயினும், மீஞ்சூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டு (A. R. No. 133 டிக 1916) அதனை நன்கு வற்புறுத்துகின்றது. பொருவார் மண்ணெடுத்துண்ணும் அண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர் (குறுந். 260) என்பது இவர் தொண்டையரைக் குறித்துரைப்பது. | வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பப் புலரி விடியற் பகடுபல வாழ்த்தித் தன்கடைத் தோன்றிற்று மிலனே பிறன்கடை அகன்கட்டாரிப் பாடகேட்டருளி | 5 | வறனியா னீங்கல் வேண்டி யென்னரை | | நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து வெளிய துடீஇயென் பசிகளைந் தோனே காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி யம்பர் புல்லிய | 10 | நல்லரு வந்தை வாழியர் புல்லிய | | வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத் துறையினும் பலவே. |
திணை: அது துறை : வாழ்த்தியல்: அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
உரை: வெள்ளி தோன்ற - வெள்ளியாகிய மீன் வானத்தே தோன்றவும்; புள்ளுக்குரல் இயம்ப - புள்ளினங்கள் எழுந்து ஒலிக்கவும் வந்த; புலரி விடியல் - இரவுப்பொழுது புலரும் விடியற்காலத்தில்; |