| திருந்திய அடிகளை வாழ்த்தி வணங்கி; .......... அடுபசி போக்கல் வான் அறியல என்பர் ............. எம்மை வருத்துகின்ற பசியைப் போக்குதற்கு மழையும் அறிந்து மழை பெய்யாதாயிற்றென்பார்; அண்ணல் - யானை வேந்தன் உண்மை யறியலர் காண்பறியலர் - தலைமை யமைந்த யானையையுடைய வேந்தனாகிய அதியமான் உளனாதலை யறியாதவரும் அறிந்தும் அவனைக் கண்டறியாதவரும் எ - று.
ஆனிரைகளைக் காத்தோம்பும் ஆயர்களை அறவைநெஞ்சத்தாயர் என்றார். அடிகளும், ஆகாத் தோம்பி யாப்பய னனிக்கும் கோவலர் வாழ்க்கை கொடும்பாடில்லை (சிலப். 15:120:1) என்றார். வளர்தல் மிகுதல். ஆயில், ஆய்ந்தஇல்; பொருளின்மையாற் சிறுமையுற்ற இல்லம் என்றவாறு. விழாக்காலங்களிற் பலவகைப் பூக்களால் மனைகளையும் மன்றங்களையும் ஒப்பனைசெய்து தாமும் சூடி இன்புறுதலால், எங்கும் பூக்களின் நறுமணம் நிலவுவதுபற்றி அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ் விழவணி வியன்களம் என்றும், வழிவணி முழுதும் இயல்பாகவே தன்கண்கொண்ட முற்றமென்று சிறப்பித்தற்கு விழவணி வியன்கள மன்ன முற்றம் என்றும் சிறப்பித்தார். நெடுங்காற் செருந்தியென இயைப்பினுமமையும். இன்பர்க்கெளிமையும் அல்லார்க்கு அருமையும் உடையனென்பதை அவன் நகர்மேல் வைத்து ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலுங் குறுகாக் கடியுடை வியனகர் என்றார். கோடுயர்ந்த மாடங்கள் நிறைந்திருப்பது பற்றி மலைக்கணம் உவமம் கூறப்பட்டது. சென்ற ஞான்றைச் சென்று படர் இரவென்றது, பகற்போதில் அவனூருக்குச் சென்று ஊர்க்கு முன்னேயுள்ள மன்றத்தே தங்கிப் பகற்போதைக் கழித்து இரவின் கடையாமத்தேகிணைப் பறை கொட்டித்தலைவன் புகழ்பாடுவது கிணைப்பொருநர் செயன்முறையாதல் பற்றி, பரிசில்தர நீட்டியாது விரைந்து தந்தமைதோன்ற, பாடிநின்ற பன்னாளன்றியும் என்றான். பசித்து வருந்தும் வறுமைக் கோலத்தில் பொருநனைக் காணப்பொறாது உண்டியும், உடையுந் தந்து சிறப்பித்த அதியமான் உள்ளத்தின் வள்ளன்மை நலத்தை எடுத்தோதினார். திருமலரென்பது ஈண்டுப் பகன்றை மலரை. போது விரி பகன்றைப் புதுமலரன்ன, அகன்றுபடி கலிங்கம் (புறம். 393) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர்ப்பாசிக்கு முதுமை கூறியது அதன் மென்மை மிகுதியுணர்த்தற்கு. முதுமையை நீர்க்கேற்றி, முதுநீரென்றது புதுநீரிற் பாசிபடாமை பற்றியென்று கூறலுமொன்று. தன்னுடைய ஒக்கல் பசியால் மெலிந்து நடக்கும் வலியிழந்திருக்குமாறு விளங்க. மென்னடை யொக்கல் எனற்ான். நெல்விளைவுக்குப் பகடு இன்றியமையாமையின், பகடுதரு செந்நெல் என்றார்; பகடு நடந்த கூழ் (நாலடி. 2) என்பர் பிறரும். மலையினின்றிழி தரும் நீர் முதற்கண் மலையடியிற்கிடநத் நாட்டிற் பாயுங்கால் அதன் புதுமை குன்றாமைபற்றித் தலைநீர் எனப்பட்டது. வேந்தனாகிய அதியமானது உண்மையையறியும் திறமும் அறிந்த வழி அவனைக் கண்டறியுந் திறமும் இல்லாதாரே தம் பசித் துன்பத்தைப் போக்குதற்கு மழைமேற்பழிதூற்றுவர் என்பார் வானறியலவென்பர் அடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தனுண்மையோ வறியலர் காண்பறியலரே என்றார். பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண்டு உலகு புரப் பதுவே (புறம். 107) என்று கபிலர் |