பக்கம் எண் :

462

     

     விளக்கம்: இதன்கண் ஆசிரியர் திருத்தாமனார் சேரமான் வஞ்சனைக்
கண்டு சிறப்பிக்கப்பெற்ற திறம் கிணைப்பொருநன் ஒருவன் கூறும் கூற்றாக
இப்பாட்டின்கண் விளக்கப்படுகிறது. கிணைப்பொருநன் சேரமானைக் காணச்
சென்ற   வைகறைப்போது,   “மதிநிலாக்    கரப்ப...வைகறை”   என்று
குறிக்கப்படுகிறது. மதிநிலாக் கரப்ப என்றது,  வளர்பிறை  நாளாதலைக்
காட்டிற்று. வைகறைப்போதின் வரவறிந்து கூவுதலின் தப்பாமை பற்றி,
“பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்ப” என்றார். “பொறிமயிர்
வாரணம் வைகறை யியம்ப” (மதுரை 673) என்று பிறரும் கூறுகூது காண்க.
“பொய்கைப்பூ முகைமலர” என்றது, நெய்தற்பூவைக் குறிப்பதாகக் கொள்க;
நெய்தல் வைகறையில் மலர்வது; “வைகறை மலரும் நெய்தல்” (ஐய். 188)
என்பது காண்க. கடன், முறைமை. மதிநிலா மறையவும், வெள்ளி யெழவும்,
வாரணம் இயம்பவும். பொய்கைப்பூ மலரவும் வந்த வைகறைப்போதில்
கிணைப்பொருநன் சென்று சேரமான் வஞ்சனைக் காண்கின்றானென்பது
தெளிவாம். அதன்பின், சேரமான் ஊரது காவற்சிறப்பு விளக்குவாராய்,
அவ்வூர்க்குள் நகைவரல்லது பகைவர் செல்லுதல் இயலாதென்றற்கு “நகைவர்
குறுகில்லது பகைவர்...துன்னல் போகியமூதூர்” என்றார். மூதூர் பகைவர்
துன்னுதற்காகாமைக்கு ஏது இதுவென விளக்குதற்குப் “புலியின மடிந்த
கல்லளை போல” என்றார். பெரும்பெயர் மூதூர், பெரிய பெயரையுடைய
மூதூர்; பெயருக்குப் பெருமையாவது, மூதூராளும் பெருமானாகிய வஞ்சனது
பெயரையே தனக்கும் பெயராக அமையும் பெருமை. இப்பெருமை அதன்
பழம் பெயரை மறைத்து விட்டது; சேரமான் வஞ்சன் பெயர்கொண்டெழுந்த
மூதூர் அஞ்சன் குன்றென்றிருந்து அஞ்சு குன்னு என்று இப்போது
வழங்குகிறது. இதன் பழம்பெயர் குன்றூர் என்பது போலும். கிணைவன்
வைகறைப்போதில் கிணைகொட்டிச் சென்றவன் பறையிசையாலே
தன்வரவினை அறிவித்தலும், “உள்ளிவருநர் கொள்கலம் நிறைப்போய்,
தள்ளாநிலையை யாகியர் எமக்” கென உரைத்தலும் மரபு. சேரமான் செய்த
சிறப்பையும் தான் பாடிய பாட்டினையும் சீர் தூக்கிக் காணும் கிணைவன்,
வஞ்சனது பெருமையை நோக்கத் தன் பாட்டு இறப்பவும் சிறிதாதலை
யெண்ணி வியக்கின்றானாதலால், “சிறிதிற்குப் பெரிதுவந்து” என்றான்.
உயர்ந்தோர்க்குத் தரப்படும் நறவு மிக்க தெளிவுடைத்தாகும்; அத்தகைய
தெளிவைத் தனக்கும் தந்தது கொண்டு மகிழ்கின்றவன். “நிழல் காண் தேறல்
நிறைய வாக்கி, யான் உண அருளல் அன்றியும் தானுண்மண்டைய கண்ட
மான்வறைக் கருணை ஒக்கல் ஆர அருளியோன்” என்று கூறியுள்ளான்.
ஆற்றொழுக்காகக் செல்லும் திருத்தாமனாரது இப் பாட்டின் இடையிலும் சில
அடிகள் சிதைந்த படிப்போர் உள்ளத்தில் வருத்தத்தை விளைவிக்கின்றன.
(நற். 2) என்று சான்றோர் கூறுவது காண்க. புரையோனாதலால், இவனது
பெயர் இவனது மூதூர்க்கு உரயதாயிற்றென்பது படப் “புரையோ” னென்ற
சொல் நிற்பது குறிக்கத்தக்கது. நீலகிரிப் பகுதியிலும் வயனாடுதாலூகாவிலும்
குடகுநாட்டிலும் உள்ள மலைகள் பாயல்மலை எனவும். நாடு பா(யல்)
நாடெனவும் அதன் ஒரு பகுதி உம்பற் காடெனவும் வழக்கி வந்திருக்கின்றன.