| 399. தாமான் தோன்றிக்கோன் தோன்றிக்கோன் என்பான் தோன்றிமலைக்குரிய தலைவனாவான். இம்மலை இருக்குமிடம் தெரிந்திலது. வழிவழியாகச் சிறந்து வந்த பழங்குடியில் தோன்றி அறமும் மறமும் புகழும் கொண்டு விளங்கிய இத்தோன்றிக்கோனுடைய இயற்பெயர் தாமன் என்பது. அது தாமான் என மருவித் தாமான் தோன்றிக்கோன் என வழங்கி வருவதாயிற்று. இவனைப் பாடிச் சிறப்பித்த சான்றோர் ஐயூர் முடிவனாராவர். இச்சான்றோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்பால் பேரன்புடையவர். அவ்வளவனையன்றிப் பிறரைப் பாடுவதில்லையெனவும் அவன்பாலன்றிப் பிறர் எவர்பாலும் ஒன்று வேண்டிச் செல்வதில்லை யெனவும் உறுதி கொண்டவர். ஐயூர்முடவனார் ஒருகால் வறுமை வருத்தத் தமக்குரிய சோழவேந்தனைக் காணச் சென்றார். முடவராதலின் பகடுபூட்டிய பண்டியில்தான் அவர் செல்வது வழக்கம். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஈர்த்துச்செல்லும் பகடுகளுள் ஒன்று வலியிழந்து போயிற்று. அவர் வருத்தமுற்றுத் தோன்றிக்கோவின் ஊர் அண்மையிலிருந்தது கேள்வியுற்று மெல்ல அவ்வூரை யடைந்தார். தோன்றிக்கோமானான தாமான் அவரது புலமைச் சிறப்பை முன்பேயறிந்தவனாதலால் அவர் தமக்குற்ற குறையை உரைப்பதற்கு முன்பே வேண்டுவன நல்கி அவரை மகிழ்வித்தான். அம்மகிழ்ச்சி வயப்பட்ட ஐயூர்முடவனார். கிணைவனொருவன் கூற்றாக, இப்பாட்டைப் பாடினர். இதன்கண் அவன் காவிரி பாயும் நாடனாகிய கிள்ளி வளவனை நினைந்து அவன்பாற் .செல்கின்றமையும், அவன்பாலன்றிப் பிறர்பால் செல்ல விரும்பாமையும், பிறர்முகநோக்கி அவருடைய அருணோக்கத்தைப் பெற விழையாமையும் மேற்கொண்டதனால் வறுமைமிக்க வருத்த, பொழுது மறுத்துண்ணும் சிறுமையுற்று நெஞ்சழிந்து ஒருபுடையிருந்ததாகவும், கிணைமகள் மீன் விற்று வந்த வருவாய் கொண்டு சமைத்த பாகற்பைங் கூழைப் பொழுது மறுத்துண்டு வருந்தியிருந்ததாகவும் குறித்துள்ளான். அக்காலத்தே அங்குள்ளோரால் தோன்றிக்கோனான தாமானது நல்லிசை அவன் நெஞ்சைக்கவர்ந்தது. தோன்றிக்கோன், அறவர் அறவன், மறவர் மறவன். மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன் என்ற புகழ்படைத்து விளங்கினான். வறுமை மிகுதியால் கிணைவனுடைய கிணைப்பறை வார் அறுந்து கண்கிழிந்து பயன் படாவகையில் சீர் குலைந்து கிடந்தது. இப்புகழ் கேட்டதும், தோன்றிக்கோனால் தன் வறுமைத் துயர் கெடுமென்னும் துணிவால், புதுத்தோலும் புதுவாரும் கொண்டு தன் கிணையைப் புதுப்பித்துக்கொண்டு, கிணையு றையும் கடவுட்கு, வழிபாடு செய்யத் தாழ்க்கின் எய்தக் கருதிய பொருள் உரிய காலத்தில் எய்தப் படாமையும் கூடுமென நினைந்து கடவுளையும் வழிபடாது கிணைவன் தோன்றிக் கோனிடம் சென்று, சேற்று வழியே சேறற்கண் தளர்ச்சியுறாத பகடு ஒன்றே யான் வேண்டுவது எனத் தன் குறையை யெடுத்துரைத்தற்கு முன்பே, அவன் குறிப்பானுணர்ந்து பரிசில் தரற்குச் சமைந்து பல நிரைகளை ஊர்தியுடனே நல்கினான் என்று குறித்துரைத்துள்ளான். இப் பாட்டிடையே சில அடிகள் சிதைந்துள்ளன. | அடுமகண் முகந்த வளவா வெண்ணெல் தொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல் |
|