| மகளிரொடு - தூய இயல்பை யுடைத்தாகிய கற்பொழுக்கமாகிய கொள்கையையுடைய குற்றம் தீர்ந்த குல மகளிரொடு; பருதியுருவின் பல்படைப் புரிசை - வட்டமாகிய வடிவினை யுடைத்தாகிய பல படையாகச் செய்யப்பட்ட மதிலாற் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்; எருவை நுகர்ச்சி யூபநெடுந்தூண் - பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்ட விடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து; வேத வேள்வித் தொழில் முடிந்ததூஉம் - வேதத்தாற் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய; மன்ற அறிந்தோன் - இவற்றானாய பயனை நிச்சயமாக அறிந்த அறிவினையுடையோன்; அறிவுடையாளன்தான் இறந்தோன் - அவன் தான் துஞ்சினன்; இவ்வுலகம் அளித்து-ஆதலால் இனி இவ்வுலகம் இரங்கத்தக்கது; அருவி மாறி அஞ்சுவரக் கடுகி - அருவிநீர் மறுத்து உலகத்தா ரஞ்சும் பரிசு வெம்மையுற்று; பெருவறங் கூர்ந்த வேனிற் காலை- பெரிய வற்கடமிக்க வேனிற் காலத்து; பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார் - பசித்த ஆயமாகிய பயன்படும் ஆனிரையைப் பாதுகாத்தலைச் செய்வாராக; பூவாள் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து-கூர்மை பொருந்திய கொடுவாளாற் கோவலரானவர்கள் பூக்களுடனே யுதிரக் கொம்புகளைக் கழித்து; கட்டழித்த வேங்கையின் - அதன் தழைச் செறிவையழித்த வேங்கையினை யொப்ப; மெல்லியல் மகளிரும் இழை களைந்தனர்-மெல்லிய இயல்பினையுடைய உரிமை மகளிரும் அருங்கலவணி முதலாகிய அணிகளை யொழித்தார்; எ - று.
முறை நற்கு அறியுநர் முன்னுறவேள்வித் தொழில் முடித்ததூஉ மென இயையும். எருவை யென்றது, பருந்தாகச் செய்யப்பட்ட வடிவினை.
அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்தெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
எருவை நுவற்சி யென்று பாடமோதுவாரு முளர். ஆயத்துப் பயனிரை என்பதற்கு ஆயத்திற்குப் பயனாகிய இரை யெனினு மமையும்.
விளக்கம்:கருங்குளவாதனார் பெயர் கருங்குழலாதனார் என்று அச்சுப்படியிற் காணப்படுகிறது. அது பொருந்தாது. கருங்குளம் என்னும் ஊரினரான ஆதனார் என்பது கருங்குளவாதனா ரென்பதன் பொருள். இக் கருங்குளம் பாண்டிநாட்டில் இப்போது கோட்டைக் கருங்குளமென வழங்குகிறது. இடைக்காலத்தே, இது கருங்குள வளநாட்டுக் கரிகால சோழ நல்லூரான கருங்குளம் (Annual Report of Epigraphy. Madras No. 269 of 1928) எனப்பட்டது. இதனால் இவ்வூர், கரிகாற் சோழனால் ஆதனார்க்குத் தன் பெயரால் தரப்பட்ட தென்பதும் தெளிவாம். இவ்வூரில் பாண்டியன் இராசசிங்கன் காலத்தில் இராசசிம்மேச்சுரம் என்னும் சிவன் கோயில் கட்டப்பட்டுளது. இவ்வூர் பின்பு சீகண்ட நல்லூ ரெனவும் பெயர் பெற்றது. (A.R.No. 277 of 1928) இவ்வூர்க் கோயிலுக்குத் திருவாங்கூர் வேந்தரும் திருப்பணி (A. R. No.287 of 1928) செய்துள்ளனர். இதனால் சேரர் குடிக்கும் |