பக்கம் எண் :

56

     

இவ் வூர்க்கும் தொடர் புண்மை துணியப்படும். சடங்கவிகள் -
ஆறங்கங்களையும் உணர்ந்தவர்கள். இவருள் நேர்நின்று செய்வோ
ரொழியச் செயல்முறையைக் காட்டுவோரை உபதிருட்டாக்கள் எனவும்,
பருந்து விழுங்குவதாகச் செய்யப்படுவதைக் கருடசயனமெனவும் கூறுவர்.
சடங்கவிக் குறிச்சி யென்றோர் ஊரும் பாண்டியநாட்டில் உண்டு
(A. R. 453 of 1930). அமர் கடத்தல், கடும்பு புரத்தல், வேள்வித் தொழின்
முடித்தல் என்ற இவற்றால் ஆகும் இம்மை மறுமைப் பயன்களை
நன்கறிந்தவன் கரிகாலன் என்பர், “அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்”
என்றார். வேங்கைப்பூ மகளிரணியும் பொற்றாலிபோல் இருத்தலின்,
அப்பூவுதிர்ந்த வேங்கை இழை துறந்த மகளிர்க்கு ஏற்ற உவமமாயிற்று.
“முறைநற்கறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்றதற்கு உரைகாரர் கூறும்
உரையினும், “முறைவழங்கும் சான்றோர் தம்முன் வீற்றிருக்கவும் தன்
இளமை தோன்றாவாறு நரை முடித்து முதியோன் கோலம் பூண்டு முறை
வழங்கிய கரிகாலன் புகழப் பட்ட திறத்தை ஏற்றி யுரைகூறுவது சீரிது.

---

225. சோழன் நலங்கிள்ளி

     சோழன் நலங்கிள்ளி உரையூரில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில்,
உறுபகை ஒடுக்கி உலகோம்புந் துறையில் மேம்பட்டு விளங்கினான்.
ஏனைவேந்தர் பலரும் இவனுக்கு அஞ்சியே வாழ்ந்தனர். ஒவ்வொரு
வேந்தரிடத்தும் வெற்றிகுறித் தூதும் வலம்புரிச் சங்கு இருந்ததெனினும்,
அதனை முழக்கின் சோழன் நலங்கிள்ளி செவிக் கெட்டும்; அது கேட்பின்
அவன் பொறாது போந்து நம் வலியை யழிப்பனென அஞ்சி அதனைத் தம்
மனையின் ஒரு புடையே கட்டிவைத்திருந்தனர். வேந்தர் மனைகளில் பள்ளி
யெழுச்சிக் காலத்தில் அவ்வலம்புரி முழக்கப்படின், அதுகேட்டு,
நலங்கிள்ளியை நினைந்து என் னெஞ்சு வருந்துவது வழக்கம். மேலும்,
நலங்கிள்ளியின் படைமிக்க பெருமையுடையது. அவனது படை
புறப்படுங்கால் முன்னே செல்லும் தூசிப்படையிலுள்ளார் பனையின்
நுங்கினைத் தின்னுங் காலமாயின், இடைப்படையிலுள்ளார்
அப்பனையிருக்கும் இடம் சேரும்போது பனை நுங்கு முற்றிக் காய்த்துக்
கனிந்துவிடும்; அவர்கள் அதனைத் தின்னக்கூடிய காலமாகும்; படையின்
கடையிற் செல்வோர் அவ்விடத்தை யடையும்போது, பனங்கனியும் போய்ப்
பிசிரொடு கூடிய பனங்கிழங்கு பெற்றுச் சுட்டுத் தின்னும் காலமாகும்.
இத்துணைப் பெரும் படையை வைத்தாளும் பேராற்றல் படைத்தவன்
சோழன் நலங்கிள்ளி. இவன் வலிமுற்றும் இப்போது
புறங்காட்டிடத்ததாயிற்றே என அவன் இறந்துபட்ட போது, சோழநாட்டு
ஊர்களுள் காவிரிக்கரைக் கண்ணதாகிய ஆலத்தூரில் வாழ்ந்த சான்றோர்,
பிரிவாற்றாது இப் பாட்டைப்பாடி இதன் கண் மேற்கூறிய கருத்தெல்லாம்
தொகுத்துரைத்துக் கையற்று இரங்கினார்; இச் சான்றோர் ஆலத்தூக்கிழார்
எனப்படுவர். இவர் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பல
பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்துள்ளனர்.

 தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ