பக்கம் எண் :

58

     

     முன்பு நலங்கிள்ளி சேட்சென்னி கேட்குவன் கொல்லென ஒரு சிறைக்
கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலா நிற்க, பறையொடு காலைத்
தோன்றினும் யான் நோவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கேள்
இனி யென்றது நெஞ்சினை.

    “வென்றிநுவலா” வென்றும், ”காலை தோன்றின” என்றும் பாட
மோது வாருமுளர்.

    விளக்கம்: ஆலத்தூர்கிழாருடைய ஆலத்தூர் சோழநாட்டுக் காவிரித்
தென்கரையிலுள்ளதோரூர். இதனை இடைக்காலக் கல்வெட்டுக்கள்
“ஆவூர்க் கூற்றத்து விக்கிரமசோழன் பேராலத்தூர்” (A. R. No. 481 of
1922) என்றும், “தென்கரை நித்த விநோத வள நாட்டு ஆலத்தூர்”
(A. R. No. 360 of 1929) என்றும் கூறுகின்றன. திருச்சிவபுரத்துக்
கல்வெட்டொன்றில், “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆலத்தூர்
கிழன்” (A. R. No. 273 of 1927) ஒருவன் காணப்படுகின்றான். இக்
குறிப்புக்களால், இப்பாட்டைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் இவ்வூரினரே
யெனத் துணியலாம். நிலமலர் வையம் இடமகன்ற உலகம். தோற்றம், ஈண்டு
விளைவு குறித்து நின்றது. தோற்றத்தின் விளைவு வியன்காட்டதாயிற்று
என்க. வெற்றி நுவல் அத் திரிவாய் வலம்புரி என இயைந்து, வெற்றியைப்
பலரும் அறியத் தெரிவிப்பதாகிய அத் திரிவாய் வலம்புரி யென வுரைப்பது
சீரிது. பள்ளி யெழுச்சிக் காலத்தே வேந்தர் மனைமுன்றிலில் வலம்புரி
முழக்குவது மரபு. “இரங்குகுரல் முரசமொடு வலம்புரி யார்ப்ப” (புறம். 397)
என்று பிறரும் கூறுதல் காண்க. தோற்றத்தைச் சிறப்பித்து அதன்கண்
ஈடுபட்டு நின்ற நெஞ்சை மாற்றி நலங்கிள்ளி இறந்த நிகழ்ச்சிக்கட்
செலுத்துதலின், “கேள் இனி” என்றார். “இனி” யென்றதனால், இப்பாட்டிற்
கூறப்பட்ட சிறப்புக்கள் பலவும் முன்பு நிகழ்ந்தவையென்பது பெறப்பட்டன.
“கொளீஇய” என இறந்த காலத்தாற் கூறினமையின், “முன்பு” என்பதும்,
“தோன்றினும்” என்றதனால், “இப்பொழு” தென்பதும் வருவிக்கப்பட்டன.
“வெற்றி நுவலா” என்ற பாடத்துக்கு “வெற்றியைச் சொல்லாமல்” என்றும்,
“காலைத் தோன்றின” என்ற பாடத்துக்குக் காலையில் முழங்கின என்றும்
உரைக்க.

---

226. சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன்

     சோழன் கிள்ளிவளவன் பேராண்மையும் பெருவண்மையும்
படைத்தவன். ஆசிரியர் ஆலத்தூர்கிழார், “மன்னர் அடுகளிறு உயவும்
கொடிகொள் பாசறைக், குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப், புலா
அக்களஞ் செய்த காலஅத் தானையன்” என்றும், “பொருநர்க்கு ஓக்கிய
வேலன்” என்றும் (புறம். 69) இவனது ஆண்மை நலத்தைச் சிறப்பிப்பர்.
வெள்ளைக்குடி நாகனாரென்பார், “மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க்
கிழவர், முரசு முழங்குதானை மூவருள்ளும், அரசெனப் படுவது நினதே
பெரும” (புறம். 35) என்று எடுத்தோதிப் பாராட்டுவர்; “செஞ்ஞாயிற்று நிலவு
வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது
விளைக்கும் ஆற்றலை” என இவனுடைய ஆண்மை மிகுதியை
ஆவூர்மூலங்கிழார் மிகுத்துரைப்பர்; கோவூர்கிழார் என்பார், “காலனும்
காலம் பார்க்கும் பாராது, வேலீண்டுதானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்” தென விளம்புகின்றார். இங்ஙனம்