| சான்றோர் பலராலும் பல்வேறு வகையிற் பாராட்டப்பெற்ற இவ் வளவன் குளமுற்றம் என்னும் இடத்துள்ள அரண்மனையில் இறந்தான். அக்காலத்தே மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெருமாட்டியார் அச்செய்தியைக் கேள்வியுற்று ஆறாத் துயருற்றார். கிள்ளிவளவனுடைய ஆண்மையும் வன்மையும் கொண்டவண்மையும் அவர் நினைவுக்கு வந்தன. அவனது பேராண்மையை நினைந்தவர்க்கு அவனது இறப்பு அமைதி தரவில்லை. வளவன் உயிர் கெண்ட கூற்றம், அவன் நேர்நின்று மெய்தீண்டியோ, வெகுண்டோ, மனதிற் பகைமைகொண்டோ அவனுயிரைக் கொண்டிருக்க முடியாது; இம் மூன்றனுள் எது செய்யினும் கூற்றமே தோற்றோடிப்போம்; அக் கூற்றம் உயிர்கொண்டொழிந்த திறம் வேறொன்றாக வேண்டும். அஃது இரவலர் உருவில் வந்து அவன் எதிர் நின்று கைதொழுது பாடி அவனுயிரை இரந்து அவன் ஈயப்பெற்றுச் சென்ற தாகல் வேண்டும் என்று நினைத்து நினைக்குந்தோறும் நெஞ்சுருகப் பாடிப் புலம்பினார். அதுவே இப்பாட்டு.
| செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் | 5 | மண்டமர் கடக்குந் தானைத் | | திண்டேர் வளவற் கொண்ட கூற்றே |
திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: செற்றன்றாயினும் - தன் மனத்துள்ளே கறுவு கொண்டதாயினும்; செயிர்த்தன் றாயினும் - வெளிப்பட நின்று வெகுண்டதாயினும்; உற்றன் றாயினும் - உற்று நின்று கையோடு மெய்தீண்டி வருத்திற்றாயினும்; உய்வின்று - அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி இரந்தன்றாகல் வேண்டும் - பாடுவாரைப் போலத் தோன்றி நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர் கொண்டதாகல் வேண்டும்; பொலந்தார் - பொன்னானியன்ற மாலையினையும்; மண்டமர் கடக்கும் தானை - மண்டிய போரின்கண் எதிர் நின்று வெல்லும் படையினையும்; திண்டேர் வளவன் கொண்ட கூற்று - திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று; எ - று.
பொலந்தார் வளவனென இயையும். கூற்றம் இரந்ததாகல் வேண்டும்; இம் மூன்றனுள் ஒன்று செய்யினும் பிழைப்பின்று எனக் கூட்டுக.
இஃது அவன் ஆண்மை மிகுதியினையும், வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு.
விளக்கம்:செற்றம் - கறுவு. செற்றம் மனத்துள்ளே வெகுளுவது; செயிர்த்தல், வெளிப்படையாக வெகுளுதல். உறுதல், மெய் தீண்டுதல். இரந்தன்று இரந்துகொண்டது. கடத்தல், வஞ்சியாது பொருவது; |