பக்கம் எண் :

60

     

அஃதாவது நேர்நின்று பொருதுவெல்வது. காஞ்சித் திணையில் கூறப்படும்
துறைவகைகளுள், “கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ, ஒழிந்தோர்
புலம்பிய கையறு நிலை” (புறத். 19) என்ற துறைக்கு இளம்பூரணர் இதனை
எடுத்துக் காட்டுகின்றார். இனி, நச்சினார்க் கினியர், இதனை “மன் அடாது
வந்த மன்னைக் காஞ்சி” (புறத்.24) என்று கூறுகின்றார். செற்றும்
செயிர்த்தும் உற்றும் உயிர்கோடல் ஆகாதென்றது ஆண்மை மிகுதி; பாடுநர்
போலக் கைதொழுதேத்தி இரந்தன்றாகல் வேண்டும்” என்றது வண்மை
மிகுதி.

---

227. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     குளமுற்றத்தில் கிள்ளிவளவன் துஞ்சியது அறிந்த சான்றோர்களில்
மாசாத்தனார் என்பவர் ஒருவர். அவர் சோழநாட்டு ஆவடு துறை யென்னும்
ஊரினர். திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்பது பழம் பெயரென
அவ்வூர்க் கல்வெட்டுக்களும் (A. R. No. 124 of 1925) திருத்தொண்டர்
புராணமும் கூறுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப் பெயர்; திடுவாவடுதுறை
யென்பது திருக்கோயிலுக்குப் பெயர். நாளடைவில் சாத்தனூர் என்பது
மறைந்து போகவே, திருவாவடுதுறையென்ற பெயரே ஊர்க்கும்
பெயராய்விட்டது. ஆவடுதுறை யென இருத்தற்குரியது ஆடுதுறையெனப்
பிழைக்கப்பட்டது. இச் சாத்தனூர் என்னும் பெயர் மாசாத்தனார் பெயரால்
பண்டைச் சோழமன்னரான கிள்ளிவளவன் முதலிய சோழமன்னரால்
வழங்கப்பட்டதாகல் வேண்டும்.அதனால் அவர் ஆவடுதுறை மாசாத்தனார்
என ஏடுகளில் வழங்கப்படுகின்றனர். அவர்க்குக் கிள்ளியின்
பேராண்மையும் பெருவன்மையும் நன்கு தெரிந்திருந்தமையின் அவன்
உயிரைக் கவர்ந்து கொண்ட கூற்றுவன்பால் மிக்க சினமுண்டாயிற்று.
வளவனது உயிருண்ட கூற்றினது கொடுமை ஒருபுறமிருக்க, மன்னுயிரை
யுண்பதையே நோக்கியிருக்கும் இயல்புபற்றிக் கூற்றம் தன் செயலுக்கே
கேடுசெய்து கொண்டதை நினைந்து அதன் பேதைமைக்கு இரங்குவார்
போல அதை வையலுற்றார். வளவன் இறந்ததனால் பிறந்த ஆற்றாமை
காரணமாக இவ் வைவினைச் செய்கின்றாராயினும் இதன்கண், அவருடைய
வருத்தமும் இரக்கமும் தோன்றிப் படிப்போர் உள்ளத்தை உருக்குகின்றன.
அதனை இப்பாட்டின்கட் காண்க. இதன்கண், கூற்றுவனை நோக்கி,
‘இரக்கமில்லாத கூற்றமே! விதையைக் குற்றியுண்டு மேல் விளைவுக்கு
ஏங்கிநிற்கும் பேதை யுழவனைப்போல நீ நின் பசிக்கு வேண்டும்
உயிர்களை நாடோறும் தன் போர்ச் செயலால் கொன்று தரும்
கிள்ளிவளவனுயிரையே இப்போது உண்டொழிந்தாய்; அவன் இருக்குமளவும்
பசி வாட்ட முண்டாகாவாறு வேண்டும் உயிர்களை அவன் நல்க உண்டு
வாழ்ந்தாய்; இத்தீச்செயலால் இனி நின் பசி தணிப்போரைப் பெறாது
வருந்தப் போகின்றாய், காண்” என்ற கருத்தமையக் குறித்துள்ளார்.

 நனிபே தையே நயனில் கூற்றம்
விரகின் மையின் வித்தட் டுண்டனை
இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும்.