பக்கம் எண் :

6

     
20இரும்புலி வரிப்புறங் கடுக்கும்
 பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே.

   திணையுந்துறையுமறை.இருங்கோவேள்பாரிமகளிரைக்
கொள்ளானாகக் கபிலர் பாடியது.


    உரை: வெட்சிக்கானத்து   வேட்டுவர்   ஆட்ட - வெட்சியையுடைய
காட்டின்   நடுவண்    வேட்டுவர்     அலைப்ப;    கட்சிகாணாக்
கடமா நல்லேறு -   தனக்குப்  புகலிடங்     காணாத  கடமாவினது
நல்ல ஏறு; கடறு மணிகிளர - வரைச்சாரல் மணி மேலே கிளம்பவும்; சிதறு
பொன்மிளிர - சிதறிய பொன் விளங்கவும்; கடிய கதழும் நெடுவரைப்படப்பை
- விரையவோடும்மலைப்பக்கத்து;  வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி -
வெற்றி  நிலைபெற்றசிறந்த புகழ் பொருத்தி; இருபால் பெயரிய உருகெழு
மூதூர் - சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற் பெயர்பெற்ற
உட்குப்பொருந்திய பழைய வூரின்கண்; கோடி பல அடுக்கிய பொருள்
நுமக்கு உதவிய - பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு
உதவிய; நீடுநிலை அரையத்துக் கேடும் - நீடிய நிலையையுடைய
அரையத்தினது கேட்டையும்; இனி கேள் - இனிக் கேட்பாயாக, அது
கெடுதற்குக் காரணம்; நுந்தை தாயம் நிறைவுற எய்திய - நினது தாளால்
தரப்பட்ட பொருளையன்றி நுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற;
ஒலியல் கண்ணி புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே;
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் - நும்மை யொக்கும் அறிவினையுடைய
நுங்குடியுள் ஒருவன்; புகழ்ந்த செய்யுள் கழா அத் தலையை இகழ்ந்ததன்
பயன் - புகழ்ந்த செய்யுளையுடைய கழா அத் தலையா ரென்னும் புலவரை
அவமதித்ததனாலுண்டான பயன்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட
தேரையுடைய தலைவ; இவர் எவ்விதொல்குடிப் படீஇயர் - இவர் எவ்வியுடைய
பழைய குடியிலே படுவார்களாக; மற்று இவர் கைவண் பாரிமகளிர் என்ற -
பின்னை இவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லிய;
என்தேற்றாப் புன்சொல் நோற்றிசின் - எனது தெளியாத புன்சொல்லைப்
பொறுப்பாயாக; பெரும - பெருமானே; விடுத்தனென் - யான் நின்னை விடை
கொண்டேன்; நின்வேல் வெலீஇயர் - நின்வேல் வெல்வதாக; அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை - அரைமலையில் முகையற
மலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது; மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
- கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூப்பரந்த பொற்றைக்கல்; இரும்புலி
வரிப்புறம் கடுக்கும் - பெரும்பிலியினது வரியையுடைய புறத்தை யெக்கும்;
பெருங்கல் வைப்பின் நாடுகிழவோய் - பெரிய மலையிடத் தூர்களையுடைய
நாட்டையுடையோய் எ - று.