பக்கம் எண் :

72

     

232. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின், அவன் உடலை அடக்கம்
செய்த சான்றோர் நன்னாளில் அவனுக்கு நடுகல் நாட்டினர். அதன்கண்
அவன் பீடும் பெயரும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுகல் விழா அயர்ந்தனர்.
அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருந்தனர்.அவருடன் ஒளவையாரும்
இருந்தார்.  நடுகல்லாகிய  அதியமானுக்குச்  சிறுகலங்களில்  நாரால்
வடிக்கப்பட்டதேறலைவைத்துப்  படைத்து வழிபட்டனர். அதுகண்ட
ஒளவையாருக்கு  நெஞ்சில்  எழுந்ததுயரத்துக்கு அளவில்லை; அவர்
கண்களில்  நீர்  ஆறாய்ஒழுகிற்று.“பகைவர் தமது நாடு முழுவதும்
கொடுப்பினும்கொள்ளாதமறமாண்புடையஇந்தஅதியமான்  இந்தச்
சிறுகலங்களில் பெய்து தரப்படும் தேறலைக் கொள்வானோ?” என்ற
இந்தப் பாட்டைப் பாடினார்.

 இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
5கோடுயர் பிறங்குமலை கெழீஇய
 நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே.

   திணையும் துறையு மவை. அவனை யவர் பாடியது.

     உரை: காலை மாலை இல்லாகியர் - அவனையின்றிக் கழிகின்ற
காலையும் மாலையும் இனி இல்லையாகுக; யான் வாழும் நாள் அல்லாகியர்
- யான் உயிர் வாழும் நாளும் எனக்கு ஒருபயன் படாமையின் அவை
யல்லவாக; நடுகற் பீலி சூட்டி - நடப்பட்ட கல்லின்கண் பீலியைச் சூட்டி;
நாரரி சிறுகலத்து உகுப்பவும் - நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய
கலத்தான் உகுப்பவும்; கொள்வன் கொல்லோ - அதனைக் கொள்வனோ
கொள்ளானோ; கோடு உயர் பிறங்குமலை கெழீஇய - சிகரமோங்கிய
உயர்ந்த மலைபொருந்திய; நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோன் -
நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்; எ - று.


    நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத் துகுப்பவும்
கொள்வன் கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

    விளக்கம்: காலை பகற்போதின் தொடக்கமாய்ப் பகலையும், மாலை
இரவுப்போதின் தொடக்கமாய் இரவையும் குறித்துநின்றன. பயன் படாத
நாள் வீணாள் எனப்படுதலின், “அல்லாகியர்” என்றார். நடுகல்லில் இறந்த
தலைவனுடைய பெயரையும் பீடுகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுவது
மரபாதலின் நடுகற் பீலி சூட்டி யென்றார். “நல்லமர்க் கடந்த நாணுடை
மறவர், பெயரும் பீடு மெழுதி யதாதொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை
நடுகல்” (அகம்: 67) என வருதல் காண்க. நடுகல்லாயினானைத்
தெய்வமாக்கி, அவன் விரும்பும் உணவைப் படைத்துப் பரவுவது
பண்டையோர் வழக்கு. அதனால் சிறுகலங்களில் தேறலைப் பெய்து
படைத்தனரென அறிக. “ஒலிமென கூந்த லொண்ணுத லரிவை, நடுகற்
கைதொழுது பரவும்” (புறம்: 306) என நடுகல் தெய்வமாகப் பரவப்படுவது
காண்க.