பக்கம் எண் :

83

     

238. வெளிமான்

     வெளிமானது நல்லூர்க்குப் போந்து அவன்பால் பரிசில் பெற்றுத்
தமது வறுமைத் துன்பத்தைப் போக்கிக்கொள்வது கருத்தாக வந்தவர்
ஆசிரியர் பெருஞ்சித்திரனார். அவர் வந்தபோது வெளிமான் துஞ்சும்
நிலையில் இருந்தான். ஆயினும், பெருஞ்சித்திர னாரது பெருமையும்
புலமையம் நன்கறிந்திருந்தமையின் முகத்தால் அன்புற நோக்கி இன்புற
இருத்தி அவரை வரவேற்றான். தன் தம்பி இளவெளிமானை நோக்கிப்
பெருஞ்சித்திரனாருக்கு வேண்டும் பரிசில் நல்கிச் சிறப்பிக்கு மாறு
பணித்தான். பின்பு சிறிது போதில் வெளிமான் துஞ்சினான். அது கண்டு
ஆற்றாது பெருஞ்சித்திரனார் பெரிதும் மனம் வருந்தி,“அவனது மறைவால்
பாடுவார் கூட்டம் பரிவுற்று வருந்துமென்றும்,போர் முரசும் போர்க்களிறும்
பிறவும் கையற்று மெலியுமென்றும் நினைந்து, மாரிக் காலத்திரவில்
கலமொன்றிற் போந்த கண்ணில்லாத ஊமன், கலம் சிதைதலால் கடலில்
வீழ்ந்து கலங்குவதுபோல யானும் கலங்குகின்றேன்; என் சுற்றம்
என்னாகுமோ, அறியேன்; இறந்துபடுதலே தக்கது போலும்” என்ற
கருத்தமைந்த இப் பாட்டைப் பாடி வருந்தினார்.

 கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்
பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்
5 காடுமுன் னினனே கட்கா முறுநன்
 தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே
தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே
ஆளில், வரைபோல் யானையு மருப்பிழந் தனவே
10வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப
 எந்தை யாகுத லதற்பட லறியேன்
அந்தோ வளியேன் வந்தனென் மன்ற
என்னா குவர்கொலெற் றுன்னி யோரே
மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின்
15ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக்
 கண்ணி லூமன் கடற்பட் டாங்கு
வரையளந் தறியாத் திரையரு நீத்தத்
தவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமற் றகுதியு மதுவே.

   திணையும் துறையு மவை. வெளிமான் துஞ்சியபின் அவர்
பாடியது.

    உரை: கவி செந்தாழிக் குவி புறத்து இருந்த - பிணமிட்டுப்
புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்த புறத்தே யிருக்க;