பக்கம் எண் :

88

     

தசும்பு- கட்குடம். தீஞ்செறி, இனிய செறிவை யுடைத்தாகிய கள்.
தொலைச்சினன் என்றது பலர்க்கும் வழங்கித் தீர்த்தான் என்பதாம்.
மயக்குடைய மொழியென்பது மயங்குதலையுடைய மொழியெனவும்
மயக்கமுடைய சொற்கள் எனவும், பொருள் மயங்கிய சொற்கள் எனவும்
மூவகையாகப் பொருள்பட நிற்றலால் மூன்று பொருளும் எடுத்துக்
காட்டினார். இடுகவென்றதற்குப் புதைக்க என நேர் பொருள் கூறாது,
“வாளால் அறுத்துப் போகடினும் போகடுக” என்றது, இவ்வாறு வாளாற்
போழப்பட்டாரைச் சுடுவது மரபன்மையின், அப்பொருள் தானே
பெறப்படவைத்தார். மேலும் இங்கு இடுதல், சுடுதல் என்பனவற்றைப் பற்றி
யன்று ஆராய்ச்சி எது செய்யினும் கேடில்லை யென்றற்கு, “படுவழிப்படுக”
என்றார்.

---

240. ஆய் அண்டிரன்

     பொதியமலையைச் சூழ்ந்த வேணாட்டுக்குரியனாய் ஆய்குடியிலிருந்து
ஆட்சிபுரிந்துவந்த வள்ளலாகிய ஆய் அண்டிரன், புலவர் பாணர் முதலிய
பலர்க்கும் ஈத்துப் புகழ் நிறுவி என்றும் பொன்றா இசைவடிவினனாய்
இருந்துவந்தான். மேலைக் கடற்கரையில் பொதியின் மலையை நடுவாகக்
கொண்டு வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிடந்த நாடு வேளிர்க்குரிய
வேணாடாகும். இதன் வடக்கில் குட்டநாடும் தெற்கில் குமரிப் பகுதியான
தென்பாண்டி நாடும் இருந்தன. இவ்வேணாட்டைமேனாட்டுத் தாலமி முதலிய
அறிஞர் ஆவி (Avi) நாடெனக் குறித்தனர். இதனை ஆண்டவேந்தர், வேள்,
வேளிர், வேண்மான் என்றும் வேணாட்டடிகள் என்றும் தம்மைக் கூறிக்
கொண்டனர். இந் நாட்டின் தென்பகுதியில் பொதியிலைச் சூழ்ந்து ஆய்
அண்டிரனது நாடு இருந்தது. செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடியைத்
தலைமையாகக் கொண்டு ஆய்குடிப்பகுதி யென்றொரு பகுதியுளது.
குட்டநாட்டுச் சேரர்களுக்கும் தென்பாண்டி வேந்தர்க்கும் இடையிலிருந்த
ஆய் நாடு கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுவரையில் பல
இன்னல்களுக்கிடையே ஆய் குடியில் தோன்றிய வேந்தராட்சியில் இருந்து
வந்தது. ஆய் அண்டிரன் ஆய்குடியைத் தோற்றுவித்த முதல்வனாகலாம்
எனக் கருதுவர். பழுமரந் தேர்ந்து வரும் பறவை போலப் புலவர் பலரும்
அவனை நோக்கி வந்துகொண்டிருந்தனர்; அண்டிரனும் அவர்
வேண்டுவனவற்றை ஆர வழங்கிக் கொண்டு வந்தான். அவன் வாழ்நாள்
முடிந்தது. கண்ணிலாக் காலன் அவன்பால் உயிர்கவர்ந் தொழிந்தான். உயிர்
கொடுத்துப் புகழ் கொண்ட அண்டிரன் மேலுலகம் சென்றான். சான்றோர்
அவன் உடம்பை ஈமத்தெடுத்த எரியில் இட்டனர்; அவன் உருவுடம்பு
மாய்ந்தது; அதனோடு அவன் உரிமை மகளிரும் மாய்ந்தனர். அந் நிகழ்ச்சி
கண்ட புலவர் பலரும் கையற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் வேறு நாடு
செல்வாராயினர். இவற்றை உடனிருந்து கண்ட சான்றோருள் குட்டுவன்
கீரனார் என்பவர் ஒருவர். அவர் குட்ட நாட்டுச் சிறப்புடைய குட்டுவர்
குடியிற் பிறந்தவர். கீரன் என்பது அவரது இயற்பெயர். அவர் அண்டிரன்
இறந்ததும் உரிமை மகளிர் உடனுயிர் விடுத்ததும் கண்டு கலங்கிய
தொருபுறம் நிற்க, கற்று வல்ல புலவர் பலரும் வேறுநாடு செல்வது கண்டு
மிகவும் மனங்கலங்கினார். அக் கலக்கத்திடை இவ்வினிய பாட்டையும்
பாடினார்.