| ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும் வாடா யாணர் நாடு மூரும் பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன் கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு | 5 | கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப | | மேலோ ருலக மெய்தின னெனாஅப் பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி | 10 | ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது | | புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் வாடிய பசிய ராகிப்பிறர் நாடுபடு செலவின ராயின ரினியே. |
திணையும் துறை மவை. ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
உரை: ஆடுநடைப் புரவியும் - தாளத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடையையுடைய குதிரைகளும்; களிறும் தேரும் - யானைகளும் தேர்களும்; வாடாயாணர் நாடும் ஊரும் - அழியாத புதுவருவாயையுடைய நாடும் ஊர்களும்; பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் - பாடுவார்க்குக் குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன்; கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு - கோடேந்திய அல்குலினையும் குறிய வளைகளையுமுடைய உரிமை மகளிரோடு; காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப - காலனென்று சொல்லப்படாநின்ற கண்ணோட்ட மில்லாதவன் கொண்டுபோக; மேலோர் உலகம் எய்தினன் எனாஅ தேவருலகத்தை யடைந்தானாகக் கொண்டு; பொத்த அறையுள் - பொந்தாகிய தான் வாழுமிடத்து;போழ்வாய்க் கூகை - போழ்ந்தாற் போலும் வாயலகையுடைய பேராந்தை; சுட்டுக்குவி எனச் செத்தோர்ப் பயிரும் - சுட்டுக் குவியென்று செத்தோரை அழைப்பதுபோலக் கூவும்; கள்ளியம் பறந்தலை - கள்ளியையுடைய பாழிடமாகிய புறங்காட்டுள்; ஒரு சிறை அல்கி - ஒரு புடையிலே தங்கி; ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது - ஒள்ளிய தீச்சுட உடம்பு மாய்ந்துவிட்டது; புல்லென் கண்ணர் - பொலிவழிந்த கண்ணினையுடையராய்; புரவலர்க் காணாது - தம்மைப் பாதுகாப்போரைக் காணாது; கல்லென்சுற்றமொடு கையழிந்து - ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று; புலவர் - அறிவுடையோர்; வாடிய பசியராகி - தம் மெய்யுணங்கிய பசியையுடையராய்; |