பக்கம் எண் :

95

     

தலையையுடைய பரிய தண்டுக்கோலை யூன்றி; நடுக்குற்று - தளர்ந்து;
இரும் இடைமிடைந்த - இருமல் இடையே நெருங்கின; சில சொல் பெரு
மூதாளரேம் ஆகிய எமக்கு - சில வார்த்தையையுடைய பெரிய
முதுமையையுடையேமாகிய எங்களுக்கு; எ - று.

    எமக்கு இளமை யாண்டுண்டு கொல்லோ; அதுதான் இரங்கத்தக்க
தெனக் கூட்டுக. இளமை கழிந்து இரங்கிக் கூறுதலான் இதுவும் கையறு
நிலையாயிற்று.

    “மறையென வறியார்” என்று பாடமோதுவாருமுளர்.

    விளக்கம்: தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர், இளிவர
லென்னும் மெய்ப்பாட்டுக்கு இதனை யெடுத்துக்காட்டி, “தன்கண் தோன்றிய
மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை, இளமைக் காலத்துச்
செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக் காலத்து என்றமையின்”
(தொல். மெய். 9) என்பர். நச்சினார்க்கினியார், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக்
காட்டிய முதுமை” (தொல். புறத். 24) யென்பர். பாவை, வண்டற் பாவை.
“சிறுவீ ஞாழல் தோன்றோய் ஒள்ளிணர், நேரிழை மகளிர் வார்மண
லிழைத்த, வண்டற் பாவை வனமுலை முற்றத், தொண்பொறிச் சுணங்கின்
ஐதுபடத் தாஅம்” (நற். 191) எனப் பிறரும் கூறுதலாலறிக. மறைப்
பறியாதவழி மாயமும் இல்லையாதலால், “மறையெனலறியா மாயமில் ஆயம்”
என்றார். ஆயம், ஈண்டு இளைய மைந்தர் மேற்று. இரும், இருமல்.

---

244. கையறுநிலை

ஒருவன் தான் உறுகின்ற துன்பத்தை மான் கலை ஒன்று எய்தி வருந்து
வதுபோல இப் பாட்டைப் பாடியுள்ளான். இப்பாட்டு முழுவதும்
கிடைத்திலது; பாடினவர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும் தெரியவில்லை.
உரையின் இறுதிப்பகுதி கிடைத்திருக்கிறது. ஆகவே, உரைகாரர் காலத்தே
செம்மையுற இருந்த இப்பாட்டு, தமிழன் அறிவறை போகித் தன்
தமிழின்பால் மெய்யன்பிலனாகிய, காலத்தே தன் உருவம் சிதைந்து
அழிந்து போயிற்று. இன்றும் அதுவே நிலை.

 பாணர் சென்னியும் வண்டுசென் றூதா
விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா
இரவன் மாக்களும்...

   திணையும் துறையு மவை.

    உரை: பாணர் சென்னியும் - பாணர்களுடைய தலையும்; வண்டு
சென்று ஊதா - வண்டுகள் படிந்து தாதூதுவதொழிந்தன; விறலியர்
முன்கையும் - விறலியருடைய முன்கைகளும், தொடியின் பொலியா -
தொடியணிந்து விளங்குவதொழிந்தன; இரவன் மாக்களும் - இரவலர்களும்...