் இக் கோட்டம்பலத்தில் இருந்து இறந்தான். அதனால் அவனைச் சான்றோர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவாராயின். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவள் இவனுக்குப் பேரிளமைப் பருவமெய்து முன்பே இறந்தாள். அவள் பிரிவு மாக்கோதையின் மனத்தே பெருந்துயரத்தை விளைவித்தது. அவளது உடலம் ஈமத்தில் மூட்டிய எரியில் வெந்து கரிவதாயிற்று. அதனை மாக்கோதை தன் கண்களாற் கண்டான். அவள்பால் தான் கொண்டிருந்த காதலை நினைத்தான்; அவள் பிரிந்தால் தானும் உயிர் பிரிவதாக எண்ணிய காதல்நிலை அவன் கருத்தில் தோன்றிற்று. அதனை உடனிருந்த சான்றோர் குறிப்பால் உணர்ந்து வேந்தே, காதலிபால் கொண்ட காதலினும் நாடு காவலை மேற்கொள்வதால் உளதாகும் கடமை பெரிதாகும். கடமையின் சிறப்பு நோக்காது, காதல் வாழ்விற் பிரிவால் உளதாகும் துன்பம் மிகவும் பெரிதெனச் சிறப்புற நோக்கி அதற்கு இரையாகி உயிரிழப்பது நன்றன்று எனத் தெளிவித்தனர். காதலி யிறப்பின் காதலற்குண்டாகும் துன்பம் மிகப் பெரிதாம் என்றதை மறுப்பான் போல், எத்துணைப் பெரிதாகத் தோன்றினும் காதல் நோய் அத்துணை வலியுடையதன்று; இதோ, என் கண்ணெதிரே என் ஆருயிர்க்காதலி இறந்தாள்; அவள் உடலும் தீயில் மாய்ந்தது. இதனைக் கண்டு வைத்தும் யான் இன்னும் உயிர் வாழா நின்றேன்; இதன் பண்பை என்னென்பது என்று உரைப்பானாய் இப் பாட்டினை நெஞ்சுருகிப் பாடினான்.
| யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் | 5 | தொள்ளழற் பள்ளிப் பாயல் தேர்த்தி | | ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே. |
திணையும் துறையு மவை. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு.
உரை: யாங்கு பெரிதாயினும் - எப்படிப் பெரிதாயினும்; நோய் அளவு எனைத்து - யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று; உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் - என்னுயிரைப் போக்கமாட்டாத வலியை யுடைத்தல்லாமையால்; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள்; வெள்ளிடைப் பொத்திய - வெள்ளிடையில் மூட்டிய விளை விறகு ஈமத்து - தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையினகண்; ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி - ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப் பண்ணி; ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை - மேலுலகத்தே போயினாள் மடவாள்; இன்னும் வாழ்வல் - அவள் மாயவும் |