பக்கம் எண் :

98

     

இன்னமும் உயிரிருந்து வாழ்வேன்; இதன் பண்பு என் - இவ்வுலகியற்கை
இருந்தவாறு என்னோ? எ - று.


    எனைத் தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின் நோயை இகழ்ந்து
கூறியவாறு. பாவை சேர்த்தி யென்றோதி அவளுடம்பை அழகுபடப்
பள்ளியுட் கிடத்தி யென்றுரைப்பாருமுளர். உயிர் செகுக்கலாமைக்குக்
காரணம் மதுகையுடைத்தல்லாமையென வுணர்க. பாயல் சேர்த்தி இன்னும்
வாழ்வல் என இயையும். சேர்த்த எனத் திரிப்பினு மமையும். ஞாங்கர்
மாய்ந்தனளென்பதற்கு என்னை நீத்துமுன்னே இறந்தாளென்றுமாம்.

    விளக்கம்: யாங்குப் பெரிதாயினும் என்றதற்கு ஒருவற்குத் தன்
காதலியால் உண்டாகும் காதல் மிக்க பெருமையுடையதெனினும் என்றும்,
நோய் என்றதற்குக் காதலையுடைய காதலி யிறப்பின் உண்டாகும் நோய்
என்றும் உரைப்பினும் அமையும். காதல் வாழ்வின் மாண்பை “’விரிதிரைப்
பெருங்கடல் வளைஇய வுலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேணாடும்,
இரண்டுந் தூக்கின் சீர்சா லாவே” (குறுந். 101) என்று சான்றோர் கூறுதல்
காண்க.

---

246. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

     பாண்டி நாட்டின் வடவெல்லைப் பகுதியாகிய ஒல்லையூர் நாட்டைச்
சோழவேந்தர் கைப்பற்றிக் கொண்டதனால் பாண்டியர் குடிக்குண்டாகிய
சிறுமையைச் சோழனோடு பொருது வென்று போக்கிய பெருமையுடையவன்
பூதபாண்டியன். அதனால் அவன் ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்றும்
சான்றோரால் பாராட்டப்பெற்றான். அவன் பெயர் இன்றும் நினைவுறுமாறு
நாஞ்சில் நாட்டில் பூதபாண்டி யென்ற பெயருடையதோர் ஊர்உளது.
செந்தமிழ்ப் பாண்டி நாட்டில் சிறப்புற அரசு செலுத்திய பூதபாண்டியன்
இறந்தானாக. அவன் மனைவி பெருங் கோப்பெண்டென்பாள், தீப்பாயக்
கருதினாள். அவள்மண்ணாளும் வேந்தர்க்குக் கண்ணென்று ஓதப்படும்
அரசியல் நீதிகளை நன்கு பயின்றவள்; மூதில் மகளாதலால் மறத்திலும்
வாடாத மாண்புடையள். பூதபாண்டியனுக்குப்பின் பாண்டிநாட்டைக் காக்கும்
பண்புடைய வேந்தர் இன்மையின், அரசியற் சுற்றத்தாராகிய சான்றோர் பலர்
அவளை வேண்டித் தீப்புகாது அரசுகட்டிலேறி ஆட்சிபுரியுமாறு
வேண்டினர். அவர் உரை நாட்டு மக்களின் நலம் குறித்து நவிலப்பட்டது.
ஆனால், பெருங்கோப்பெண்டோ அதனை அவ்வாறு கொள்ளாது, தன்
காதலன் உயிருடன் தன்னுயிரை ஒன்றுவித்து மறுமையிற் பிரிவிலாக் காதல்
வாழ்வு தனக் குண்டாகாவாறு விலக்கும் விலக்குரையாகக் கருதினாள்;
விலக்குண்டு உயிர்வாழக் கருதின் கைம்மைநோன்பு மேற்கொண்டு துன்புற
வேண்டியிருத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தாள். ஆற்றாமை மீதூர்ந்தது;
பலவாறு வேண்டி நிற்கும் சான்றோர்பால் வெகுளியும் மிக்கெழுந்தது.அந்த
வெகுளியுரை கண்ணீர் சோரக் கதறி நிற்கும் அவள் வாயினின்றும் ஒரு
பாட்டாய் வெளிவந்தது. அதுவே இப்பாட்டு.

 பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே