பொருட்பால் உறுப்பியல்-குடி அதிகாரம் 103. குடிசெயல்வகைஅஃதாவது , ஒருவன்தான் பிறந்த குடியை மேன்மே லுயரச் செய்தலின் திறம்.இது தாழ்வு பற்றி நாணுடையார்க்கே உள்ளதாதலின்,நாணுடைமையின் பின் வைக்கப்பட்டது. இங்குக் குடியென்றது சேரசோழ பாண்டியர் குடிகளும் சேக்கிழார் குடியும் போலக் கொடிவழியையுஞ் சரவடியையுமேயன்றி, இற்றைக்குலங்களையன்று. ஆரியத்தால் தாழ்த்தப்பட்ட தமிழ இனத்தை முன்னேற்றிய நயன்மைக்கட்சி (Justice party) யாட்சியும் , அதன் வழிப்பட்ட இற்றைத் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சியும், விரிவுபட்ட குடிசெயல் வகைகளே. ஆயின், தமிழ இனத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதும், ஆரியவழி நின்று குலத்தைப் பிறப்போடு தொடர்பு படுத்துவதுமான; சில தமிழ் வகுப்புகளின் தனித்தனி முன்னேற்றமுயற்சி திருவள்ளுவர் போலும் அறிஞர் போற்றத்தக்கதன்று. பரந்த நோக்கொடு விரிந்தவகையில் குடிசெயல் தொண்டாற்றிய தனிப்பட்ட தமிழத் தலைவர் திருவள்ளுவர் ஒருவரே. |