கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் -கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; ஓர் ஏர் உடைத்து-இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம். கடனறிவார் இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்காத கடமையுணாச்சியாளார், உம்மை இழிவு சிறப்பு. 'ஏஎர்' இசைநிறையளபெடை . சுருங்கிய கண்ணும் மழுங்கிய முகமும் ஒடுங்கியவுடலும் வளைந்த முதுகும் தளர்ந்த நிலையும் இளிவந்த சொல்லுமின்றி, மிளிர்ந்த கண்ணும் மலர்ந்த முகமுங் கொண்டு ஏக்கழுத்துமாய் எக்களித்து நிற்கும் நிலையை 'ஏர்' என்றார். இரந்துகோள் மேவார் இலாக்கடை-ஒருவரிடம் சென்று ஒரு பொருளையிரந்து பெறுதலை விரும்புவார் இல்லாவிடத்து ஈவார்க்கண் என் தோற்றம் உண்டாம்-அப்பொருளைக் கொடுப்பார்க்கு என்ன புகழுண்டாம்? ஓன்றுமில்லையே!கொள்வாரின்றிக் கொடுப்பாரில்லை. இரப்பாரின்றி ஈவாரில்லை. ஈகையின்றிப் புகழில்லை. ஆதலால், ஈவாரின் புகழுக்கு இரப்பாரே கரணியம் என்பதாம். 'தோற்றம்' ஆகுபொருளது, 'மேதல்' வினை உலக வழக்கில் மேவுதல் என வழங்கும். 'இலாஅ' இசைநிறையளபெடை. இவ்விரு குறளாலும் மக்கட் பண்பு வெளிப்பாட்டிற்கு இரப்பாரின் இன்றியமையாமை கூறப்பட்டது.
|