(மதியுடம்பட்ட தோழி தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொது நோக்கால் நோக்குதல்; காதலார் கண்ணே உள- இவ்விரு காதலரிடத்தேயே உள்ளன. பொது நோக்கு யாவரையும் ஒரு தன்மைத்தாய் நோக்கும் நோக்கு. நோக்குவார் பன்மையாலும் நோக்க நுண்வேறுபாட்டாலும் நோக்குப் பலவாயிற்று.'நோக்குதல்' பால்பகாவஃறிணைப் பெயர் இருவரும் உள்ளத்துள் மகிழ்தலைத் தன் நுண்மதியாற் கண்டாளாதலின் 'காதலார்' என்றும், அதை வெளிப்படையாகக் காட்டாமையால் 'ஏதிலார் போல்' என்றும், கூறினாள்.ஏகாரம் பிரிநிலை. "ஏனல் காவல் இவளும் அல்லள் மான்வழி வருகுவன் இவனும் அல்லன் நரந்தங் கண்ணி யிவனோ டவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே நம்முன் நாணுவர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுவ கண்ணி னானே." (இறை.கள.8- ஆம் நூற்பாவுரை)
|