பக்கம் எண் :

உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.

 

( பிரிவச்சந் தவிர்த்தது. )

உடம்பொடு உயிர்இடை என்ன - உடம்போடு உயிருக்குள்ள தொடர்புகள் எத்தன்மையன ; அன்ன மடந்தை யொடு எம் இடை நட்பு - அத்தன்மையனவே இப்பெண்ணோடு எனக்குள்ள தொடர்புகளும் .

தொடர்புகளாவன ; தொன்று தொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல் , பிரிந்து கூடல் , இன்பத்துன்பங்கள் ஒக்க நுகர்தல் , ஒன்றை ( ஒருவரை ) விட்டு ஒன்று ( ஒருவர் ) இன்றியமையாமை என்பன . தெய்வப் புணர்ச்சியால் மயங்கியிருந்த தலைமகள் பின்பு தெளிவுபெற்று இவன் யாவனோவெனவும் ; இன்று பிரிகின்றவன் மீண்டும் வருவனோவெனவும் , இன்னும் இவனொடு கூடுதல் வாய்க் குமோவெனவும் பலவாறெண்ணிக் கவல் வாள் . அதைக் குறிப்பாலறிந்த தலைமகன் , உன்னிற் பிரயேன் ; பிரியின் உயிர்தாங்கேன் என்னுங் கருத்துப் படக் கூறித் தேற்றியவாறு , ' உடம்பு ' , ' நட்பு ' என்பன வகுப்பொருமை . பலபிறவிகளில் தொடர்ந்து வந்த உழுவலன்பால் ஏற்பட்ட தொடர்பாதலின் . வாழ்நாள் முழுதுந் தொடரும் என்பதாம் என்னை யென்பது காலிங்கர் பாடம் .