அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும். இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். : "இருளுலகஞ் சேராதவாறு" என்று நல்லாதனார் ( திரிகடுகம் , 90) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.
|