(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) புல்லாது இராப்புலத்தை - தலைவியே! நீ விரைந்து சென்று காதலரைத் தழுவாது இக்கரணியத்தை மேலிட்டுக் கொண்டு புலப்பாயாக;அவர் உறும் அல்லல் நோய் சிறிதுகாலம்- அங்ஙனம் புலந்தால் அவர் அடையும்துனபநோயைச் சற்றுக் கண்டு களிப்போம். உன் ஆற்றாமை கண்டும் பிரிந்துபோய் நமக்குப் பெருந்துன்பத்தை விளைத்ததினால், நாமும் அவர்க்குச் சிறிது துன்பம் விளைத்து அவர் படும்பாட்டைக் காண்போம் என நகையாடி வாயில் நேர்வித்தவாறு. 'அல்லல்நோய்' துன்பத்தைச் செய்யுங் காமநோய். புலவி நீளின் சுவையிழக்குமாதலால் 'சிறிது' என்றாள். 'புலத்தை' -'ஐ' ஏவலொருமை யீறு, 'புலத்தி' என்பதும் பாடம். 'இராஅ' அசைநிறையளபெடை.
|