சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கல்ல - ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா, பொய்யா விளக்கே விளக்கு - அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம். புறவிருள் போக்கும் விளக்குகள் கதிரவன், நிலா, தீ என்பன. இவைபொய்யாமைபோல் அகவிருள் போக்காமையின், 'பொய்யாவிளக்கே விளக்கு' என்றார். அகவிருள் அறியாமை. 'பொய்யா' ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். பொய்யாமையாகிய விளக்கு என்பது உருவக வணி. முந்திய குறளில் வாய்மை அகத்தழுக்கைப் போக்குவதென்ற கருத்துட்கொண்டு, அதற்கேற்ப வாய்மையை விளக்காக உருவகித்தார்.
|