துறந்தபின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையுந் துறந்தபின் ஒருவர்க்கு இம்மையில் உண்டாகக் கூடிய நன்மைகளும் பலவாம் ; வேண்டின் உண்டாகத் துறக்க-அவற்றை விரும்பின் காலம் இருக்கும்படி விரைவில் துறக்க. நன்மைகள் மனவமைதியும் நன்னெறிச்செலவும் முதலியன. நீண்ட காலத்திற்கு முன் துறந்தவன் நீண்டகாலம் அந்நன்மைகளைப் பெறுவானாதலின், 'உண்டாகத்துறக்க' என்றார். நன்மைகள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. துறவால் துன்பமின்மை மட்டுமன்றி இன்ப முண்மையும் உண்டாம் என்றவாறு.
|