பக்கம் எண் :

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

 

ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றுவைத்தற்குரிய ஒரு பொருளுமில்லாமை வீடு பேற்றுத் தவத்திற்கு உரிய இயல்பாம் ; உடைமை பெயர்த்து மயல் ஆகும் - அஃதன்றி ஏதேனும் ஒரு பொருளுடைமையும் அத்தவத்தைப்போக்கி அதனால் மீண்டும் உலக ஆசையில் மயங்குதற்கிடனாம்.

'ஒன்றும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. 'மயல்' ஆகு பொருளது. ஒரேயொரு பொருளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாப் பொருள்களையும் விட்டுவிடினும், விடாத பொருளின் தொடர்பால் விட்டபொருள்கள் மேலும் ஆசை திரும்பவுண்டாகிச் செய்த தவத்தைக் கெடுத்து மனக்கலக்க முண்டாக்கும் என்பது கருத்து. முந்தின குறளில் ஒருங்கு விடல்வேண்டும் என்றதற்குக் கரணியம் (காரணம் ) கூறியவாறு.