ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை ஒருவன் விடுவானாயின் ; அந்நிலையே பேரா இயற்கை தரும் - அவ்விடுகை அப்பொழுதே அவனுக்கு ஒருகாலும் மாறாத இயல்பையுடைய பேரின்பத்தைத்தரும். நிரம்பாமையாவது எத்துணைப் பொருள் பெறினும், அவற்றைக் கொண்டு எத்துணைக்காலம் இன்பம் நுகரினும் , மனம் பொந்திகை (திருப்தி) யடையாமை. "ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி யாளினுங் கடன்மீதிலே ஆணைசெல வேநினைவ ரளகேச னிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித் திரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடுநா ளிருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவரெல்லாம்" என்றார் தாயுமானவர். இங்ஙனம் இயல்பாகவுள்ள நிரம்பாத்தன்மை இளமை, யாக்கை, உடல்நலம், செல்வம், உறவு முதலியவற்றின் நிலையாமையாலும் மேன்மேலும் அதிகரிப்பதாம். இனி, எண்வகை யெச்சப்பிறவி கட்கும் நோயொடும் வறுமையொடும் பிறந்தார்க்கும், இன்பநிலையாமை மட்டுமன்றி வாழ்நாள் முழுதும் இன்பமின்மையும் உண்டாம். அதனால், கடுமையாக வுழைத்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாதும் வாய்க்கெட்டியது வயிற்றிற் கெட்டாதும், வயிற்றிற்கெட்டியது சிறிதும் பசிதணிக்காதும் போவது போன்ற உலகவின்பம் பற்றிய அவாவை, அறவே நீக்கவேண்டு மென்பது கருத்து. எள்ளளவுந் துன்பங் கலவாததாய், எல்லையில்லா இன்பந்தருவதாய், என்றும், ஒரே தன்மையதாயுள்ளமையால், வீட்டினைப் 'பேரா வியற்கை' யென்றும் , அது அவா நீத்தவுடன் பெறப்படுதல் உறுதியாகலின் ' அந்நிலையே' தரும் என்றுங் கூறினார்."வாசியு மூசியும் பேசி வகையினாற் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை யாசையு மன்பு மறுமி னறுத்தபி னீச னிருந்த விடமெளி தாமே". (திருமந். 2613) "மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சின் மூடத்து ளேநின்று முத்திதந் தானே".( திருமந். 2614) என்று திருமூலர் கூறுதலுங் காண்க. இங்ஙனம் உடலோடிருந்தே வீடுபெறுவது உடலிருந்த வீடு (சீவன் முத்தி) என்றும், இறந்தபின் பெறுவது உடலிறந்த வீடு (விதேக முத்தி) என்றும் சொல்லப் பெறும்.துறவறவியல் முற்றிற்று.
|