அறத்துப் பால் ஊழியல் அதிகாரம் 38. ஊழ்அஃதாவது, பழம்பிறப்புக்களிற் செய்யப்பட்ட இருவினைப்பயன் செய்தவனையே செய்த முறைப்படி சென்றடையும் இயற்கை யொழுங்கு. இது முறைப்படி வருவதால் முறையென்றும் ஊழ் என்றும், அவரவர்க்குரிய இன்ப துன்பப்பகுதிகளை வகுப்பதால் பால் என்றும் வகுத்தான் என்றும், தெய்வ ஏற்பாடு போலிருப்பதால் தெய்வம் என்றும் பால்வரை தெய்வம் என்றும், பெயர் பெறும். இனி மாறாவியல்பாயிருப்பதால் இயற்கையென்றும் பெயர் பெறுவதாம். இதுஅறம் பொருளின்பம் மூன்றற்கும் பொதுவேனும், இருவினைப் பயனாயிருப்பதாலும், இனிமேலேனும் நல்லூழைத் தோற்றுவித்தற்கு இன்று முதல் நல்வினையே செய்க என்று ஏவும் வகையிலும், அறத்துப்பாலொடு சேர்க்கப்பட்டு, அதே சமையத்தில் பொருளோடிதற்குள்ள நெருங்கிய தொடர்பை யுணர்த்தற்குப் பொருட்பாலின் முன்பும் துறவற வியலின் இறுதியிலும் வைக்கப் பெற்றதென அறிக. |