பக்கம் எண் :

தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும் .

 

தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும் ; தெளிந்தான்கண் ஐயுறவும் - ஒருவனை ஆராய்ந்து தெளிந்தபின் அவனைப்பற்றி ஐயுறுதலும் ஆகிய இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தை விளைக்கும்.

'தேரான்தெளிவு' செய்யுங்கேடு முன்னரே (508) கூறப்பட்டது . ஒருவனை ஒரு வினைக்கமர்த்தினபின் அவனிடம் ஒரு குற்றமுங் காணாவிடத்தும் அவனை ஐயுறின் , இனி இப்பதவி நமக்கு நிலையானதும் உயிர்க்காப்பானது மன்றென்று கருதி , பணியாற்றுவதில் நெகிழ்வதொடு பகைவராற் பிரிக்கவும் படுவான் . ஆதலால் 'தேரான் தெளிவு' போன்றே 'தெளிந்தான்கண் ஐயுறவும்' தீங்கு விளைப்பதாம். ஆகவே இவ்விரண்டுஞ் செய்யற்க வென்பதாம்.