நிச்சநிரப்பு அறிவினைக் கொன்ற ஆங்கு - நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; பொச்சாப்பு புகழைக் கொல்லும் - மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும். நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை. 'அன்ன மொடுங்கினால் அஞ்சு மொடுங்கும்'.ஆதலாலும், "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்". (குறள் . 1046) ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அதுபோல் மறவியும் தற்காப்பின்மையாலும் கருமக்கேட்டாலும் அரசனது புகழை அழிக்கும் . வறுமையை நிரப்பென்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு .
|