பக்கம் எண் :

திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்.

 

சொல்லைத்திறன் அறிந்து சொல்லுக - சொல்ல வேண்டியதைச் சொல்லும் பொழுது தம் நிலைமையும் கேட்போர் நிலைமையும் செய்தியின் நிலைமையும் அறிந்து அவற்றிற் கேற்பச் சொல்லுக; அதனின்ஊஉங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனஞ் சொல்வதினுஞ் சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.

அறியவேண்டிய திறங்களாவன: குடிப்பிறப்பு , இயல்பு, கல்வி , அறிவு, ஒழுக்கம், செல்வம் , அகவை (வயது) , மனப்பான்மை முதலியவற்றால் ஏற்படுந் தகுதி வேறு பாடுகள். அவற்றை யறிந்து சொல்லுதலாவது , அவற்றால் தமக்கும் கேட்போர்க்குமுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் அறிந்து அவற்றிற்குரிய மரபுப்படி சொல்லுதல். அது உலகத்தோடொட்ட வொழுகலையும் கேட்போர்க் கினிமையையும் பயத்தலால் அறவினையாயிற்று; கேட்போர்க்கு விளங்கி வினை முடிவதாற் பொருள்வினையாயிற்று . அறனும் பொருளுமாகிய விளைவுகள் அவற்றை விளைக்கும் வினையின் மேல் நின்றன, 'அதனினூஉங்கு' இன்னிசை யளபெடை.