பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்-போர் செய்யுமுன் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐவகையிலும்; இருள் தீர எண்ணிச் செயல்-தனக்கும் தன் பகைவர்க்கு முள்ள நிலைமைகளை மயக்கமற எண்ணி, தன்வலி மிக்கிருப்பின் அதன்பின் போர் செய்க. தன் நிலைமையைப் பகைவர் நிலைமையொடு ஒப்பு நோக்கியே வினை துணியவேண்டியிருத்தலின், கருவி முதலிய ஐந்தும் இருசார்க்கும் பொதுவாம். 'பொருள்' தன்பொருளும் பகைவர் பொருளும் தனக்கு அழியும்பொருளும் ஆகும்பொருளுமாம். 'கருவி' தன் படையும் அதன் கருவியும் பகைவர் படையும் அதன் கருவியுமாம். 'காலம்' தனக் கேற்ற காலமும் தன் பகைவர்க்கு ஏற்காத காலமுமாம். 'வினை' தன்படைப் போர்த்திறமும் பகைவர் படைப் போர்த்திறமுமாம். 'இடம்' தான் வெல்லு மிடமும் தன் பகைவர் தோற்கும் இடமுமாம். "என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்று வழி யுடைய எண்ணினுட் பிரிந்தே" (இடை-49) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி, 'ஒடு' எண்ணுப் பொருளில் வந்து ஏனையிடத்தொடும் இயைந்ததாகக் கொள்ளப் பெறும். இக்காலவழக்கில் அஃதின்றியும் பொருள் நிரம்பும்.
|