மறை-அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள் பற்றிப் பேச்சு நிகழும்போது; எப்பொருளும் ஓரார்-அதில் எந்தப்பொருளையும் செவிசாய்த்து உற்றுக் கேளாமலும்; தொடரார்-அவனை அணுகி வினவாமலும் இருந்து; மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க-பின் அம்மறை பொருளை அடக்கிவையாது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக. தம்மைப் பற்றியதாயினும் என்பார் 'எப்பொருளும்' என்றார். 'ஓரார்.' 'தொடரார்' என்பன எதிர்மறை முற்றெச்சம். 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது; வினைமாற்றின்கண் வந்ததன்று.
|