பக்கம் எண் :

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

 

சாவா மருந்து எனினும் - உண்ணப் படும் உணவு சாவை நீக்கும் மருந்தே யெனினும்; விருந்து புறத்ததாத் தான் உண்டல் வேண்டற் பாற்று அன்று - விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்துண்டல் விரும்பத்தக்க தன்று.

இனி, விருந்தினரை வெளியே வைத்துவிட்டுத் தனித்துண்டல் சாவா மருந்தாகும் என்று சிலர் சொன்னாராயினும், அது செய்யத் தக்கதன்று என வேறோர் உரையுமுளது. அது,

"நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று".

என்றாற் போல்வது.

சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து. நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலை சிறந்ததாதலின், உம்மை முற்றும்மை.

அதிகமான் ஒளவையார்க்கு அளித்த அருநெல்லிக்கனி பரிசில் போன்றதாதலின், ஈண்டைக்கு எடுத்துக் காட்டாகாது.

இனி, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்). அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றும் பிரித்துப் பொருள் கொள்வர்.