பக்கம் எண் :

பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

 

பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதல் செயல் - ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.

கையல்லது செய்தல் , இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப் பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செய்தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.