தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே! படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்." (குறள்.158) என்று இல்லறத்திற்கும், "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310)
"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்." ( .314) என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.
|