தேவர் தம் நாவுள்- தேவர்களது நாவான நெருப்பினிடம்; ஆகுதி நயக்கும் வேள்வியால் - ஆகுதியை விரும்பி அளிக்கும் வேள்வியில் இருந்து; தாவும் மா புகை - தாவி வருகின்ற பெரும்புகையை; தழுவு சோலைகண்டு - தழுவி நிற்பதோர் சோலையைப் பார்த்து; தேவு மாதவன் தொழுது - தெய்வத்தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனை வணங்கி; எவர்க்கும் மேல் நின்றான் - யாவருக்கும் மேல் நின்றவனான ராமன்; யாவது ஈது என்றான் . இந்தச் சோலை யாது என்றான். தேவு: தே. மாதவன்: அரியதவத்தை உடையவன். வேள்வியில் தேவர்களுக்கு அளிக்கும் அவியுணவினைப் பெற்றுக்கொண்டு. அவர்களைச் சென்றடையச் செய்பவன் நெருப்புக் கடவுள் என்பதால். அந்த நெருப்புத் தேவனைத் ‘’தேவர் தம்நா’’ என்றார். கண்டு+யாவது: கண்டியாவது - குற்றியலிகரம் எவர்க்கும் மேல் நின்றான். தனக்கு மேல் வேறொரு பொருள் இல்லாதவன் என்பது பொருள். “மேலொரு பொருளுமில்லா மெய்ப் பொருள்’’ என்பார் (வாலிவதைப்படலம்) வேள்விப் புகையைத் தழுவிநிற்பதோர் சோலையைக் கண்டு. இராமன் முனிவனை வணங்கி. ‘இச்சோலை யாது’ என வினவினன் என்பது கருத்து. 25 |