பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்1


உதயணகுமார காவியம்

செய்யுளும் உரையும்

முதலாவது

உஞ்சைக் காண்டம்

D

கடவுள் வாழ்த்து

(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

1. மணியுடன் கனக முத்த

மலிந்தமுக் குடையி லங்க

அணிமலர்ப் பிண்டி யின்கீ

ழமர்ந்தநே மீசர் பாதம்

பணிபுபின் வாணி பாதம்

பண்ணவர் தாள்க ளுக்கெம்

இணைகரஞ் சிரத்திற் கூப்பி

யியல்புறத் தொழுது மன்றே.

(இதன் பொருள்) அழகிய மலரையுடைய அசோக நீழலின் கண், மணிகளும் பொன்னும் முத்தும் மிக்குள்ள மூன்று குடைகளும் நீழல் செய்து விளங்காநிற்ப எழுந்தருளியிருக்கின்ற நேமிநாதருடைய திருவடிகளை முற்படத் தொழுது வணங்கிப் பின்னர்க் கலைமகளுடைய திருவடிகளையும், சாதுக்களின் அடிகளையும் எம்முடைய இரண்டு கைகளையும் தலையின்மேல் கூப்பித் தொழுதற்குரிய இலக்கணப்படி தொழுவேமாக! என்பதாம்.

முக்குடை: சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன ‘பொன்னுநன் மணியுமுத்தும் புனைந்தமுக் குடை’ என (சூடா.க) நிகண்டிலும் வருதல் காண்க. பண்ணவர் - சாதுக்கள். நேமீசர் - நேமிநாதர் என்னும் இருபத்திரண்டாந் தீர்த்தங்கரர். (1)