.
2. பொன்னெயில் நடுவ ணேங்கும்
பூநிறை யசோக நீழல்
இன்னிய லாலயத்து
ளேந்தரி யாச னத்தின்
மன்னிய வாமன் பாதம்
வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கா
னுதயணன் கதைவிரிப்பாம்.
(இ - ள்.) பொன்னாலியன்ற மதிலிடையே
உயர்ந்துள்ள மலர் நிறைந்த அசோக நீழலின்கண்;
காண்டற்கினிய அழகையுடைய சமவ சரணம் என்னும் திருக்கோயிலினூடே,
அரிமான் சுமந்த இருக்கையின்மேல் வீற்றிருந்தருளாநின்ற
அருகக் கடவுளின் திருவடிகளை வாயார வாழ்த்தி வணங்கி
வழிபாடு செய்து உயரிய பெருமை மிகுந்தவனாகிய உதயண
மன்னனுடைய வரலாற்றினை விரித்துக் கூறுவேம். கேண்மின்!
என்பதாம், எயில்-மதில். ஆலயம், ஈண்டுச் சமவசரணம்
என்னும் கோயில். (2)
அவையடக்கம்
3. மணிபொதி கிழியு மிக்க
மணியுட னிருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை
மணியுட னன்கு வைப்பார்
துணிவினிற் புன்சொ லேனுந்
தூயநற் பொருள்பொ திந்தால்
அணியெனக் கொள்வார் நாமு
மகத்தினி லிரங்கல் செல்லாம்.
(இ - ள்.) மாணிக்கமுதலிய மணிகளையிட்டுப்
பொதிந்துள்ள துணிதானும், அந்த மணிகளைத் தன்னுட்
கொண்டிருந்த காலத்திலே மணிபொதிந்த அந்தத் துணியை
இகழாமல் அந்த மணிகளோடே சேர்த்து நன்கு மதித்து
வைப்பார் உலகத்தினர். அங்ஙனமே அறிஞர்கள் தம்
ஆராய்ச்சியின்கண் எம்முடைய சொற்கள் குற்றமுடைய
சொற்களாயவிடத்தும் அச்சொற்கள் தூய்மையுடைய
நல்ல உறுதிப் பொருளைத் தம் மகத்துக் கொண்டவிடத்தே
அணிகலன்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்ளாநிற்பர்;
ஆதலாலே, யாமும் எம் சொற்களின் சிறுமை நோக்கி
நெஞ்சத்தின்கண் வருந்துவேமல்லேம் என்பதாம். |