இதனோடு,
நாவலந் தீவிற் கிட்டா நவமணி பொதிந்து வைத்த
மேவருங் கிழியு மந்த மணியுடன் விரும்பு மாபோற்
பாவரும் குற்ற மாமென் கவிதையின் பழுதும் பாரா
தியாவருங் கொள்வாரீசன் பெயரதி லிருக்கை
யாலே?
எனவரும் செவ்வந்திப் புராணத்து
அவையடக்கச் செய்யுள் ஒப்புக்காணற் பாலது. (3)
பயன்
4. ஊறுந்தீ வினைவாய் தன்னை
யுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதிபு ணர்ந்து
குறையின்றிச் செல்வ மாமுன்
மாறுறு கருமந் தன்னை
வரிசையி னுதிர்ப்பை யாக்கும்
வீறுறு முதிர்ப்பின் றன்மை
விளம்புதற் பால தாமோ.
(இ - ள்.) இந் நூலை அன்புற்று ஒதுபவர்க்கு
அந்தப் புண்ணியம் அவருடைய பழைய தீவினை வருகின்ற
வழியைப் பொருந்தி நின்று அவற்றை வாராமல் தடுத்து
நிறுத்தும், அத்தீவினை தடையுறவே அவர்தம் நல்வினையெல்லாம்
தடையின்று அவர்பாற் சேர்தலால் யாதொரு குறையுமுண்டாகாமல்
செல்வங்கள் வந்து நிரம்பும். மாறுபாடுடையனவாய்
அவருயிருடன் முன்னரே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைப்
படிப்படியாகக் குறைக்கின்ற உதிர்ப்பைத் தோற்றுவிக்கும்.
பெருமைபொருந்திய அந்த உதிர்ப்பினது சிறப்பு
யாம் கூறிக்காட்டும் எண்மைத்தன்று என்பதாம்.
இந்நூல் புண்ணிய நூலாகலின் இதனை
ஓதுவார்க்கு இனிவரக்கடவ தீவினைகள் வாரா. வரக்கடவ
நல்வினையெல்லாம் வந்து செல்வ முண்டாக்கும் என்றவாறு.
மாறுறு முன்கருமம் என்றது முன்னரே உயிரைப் பிணித்துள்ள
வினைகளை. இவற்றைச் சிறிது சிறிதாக நீக்கும் என்பார்
வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் என்றார். உதிர்ப்பு
என்னுந் தத்துவம் கைவரப் பெறுவோர் வீடுபெறுதல்
ஒருதலை ஆகலின் அதன் பெருமை பேசலாகா தென்றார்.
இதன்கண் நற்காட்சி எய்துதற்குரிய ஏழு
தத்துவங்களில் ஊறு செறிப்பு, உதிர்ப்பு என்னும் மூன்று
தத்துவங்கள் கூறப்பட்டன.
ஏழு தத்துவங்கள்: உயி்ர், உயிரில்லது,
ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு. கட்டு, வீடு என்பன. இவற்றில், |