உதயணன் மீண்டும் காமவின்பத்தே
யழுந்துதல்
310. மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால்கடற் றோன்ற னீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே.
(இ - ள்.) புறவழகேயன்றி அகவழகாகிய
அன்புடைமையினும் மிக்க அந்தத்தேவிமார்பால்
தனக்குண்டான மோகங்கா ரணமாகத் தன் கருத்தை
இழந்து நிலைபெற்ற பெரிய காமவின்பக் கடலிலே
அப்புகழாளன் ஆர்வத்துடன் நீந்தி
விளையாடுகின்றபொழுது நூலோர் சொன்ன மூன்று வகை
மதமும் பெருகித் தோன்றுதலாலே பட்டத்துக்
களிற்றியானையானது பிடியானையை மனத்தினினைந்து
தன் காலிலிட்ட தளைகளை அறுத்துதறிவிட்டுப்
புறப்பட்ட தென்க. (8)
மதவெறி கொண்ட களிற்றியானையின்
செயல்
311. காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலச னங்களைத்
தேய்ந்து காலினேர் தீயு மிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென.
(இ - ள்.) காலின் தளையுதறிய அக்களிறு
வெவ்விய சினத்தாலே கூற்றுவனையே ஒப்பதாய்ப்
பாகர்களை வெகுண்டு நகரத்தே ஓடிச் சென்று
எதிர்ப்பட்ட பற்பல மாந்தரையும்
காலானிடறித்றரையிற் றேய்த்து நெருப்பை
வீசுகின்றவை போன்று தோன்றுகின்ற
எதிர்வருவோரை யாராய்கின்ற கண்களோடே
கடத்தற்கரிய மலை இயங்குதல் போன்று என்க.
தேய்த்து, தேய்ந்து என்பதன் விகாரம். (9)
இதுவுமது
312. வெடிப டும்முழக் கிடியே னவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே.
(இ - ள்.) இயங்கி நிலம் பிளக்கும்படி
பிளிறுகின்ற முழக்கத்தை இடி இடிப்பது போன்று
முழங்கும்; அந்நகரத்துக் கொடியுயர்த்திய
மதில்களெல்லாம் அப்பொழுது கிடுகிடு என்றசையா
நிற்கும். பாகர்கள் இடை வெளியிடப்பட்ட அதன்
பல்லாகிய கொம்பிலே வெட்டி யடக்க முயன்றும்
அடங்காமையாலே விட்டு விட்டமையாலே தன் மனம்
போனபடி படபடவென விரைந்தோடலாயிற்று என்க. (10)
|