(இ - ள்.) தேவர்களுட் சிறந்த
இந்திரன் நரவாகனனை விரும்பி ஒன்பான்வகை
நிதியங்களையும் அவனுக்குப் பரிசிலாக
உய்த்ததூஉம், தகுதியுடைய என் மகனான நரவாகனன்
முறைமையோடே அவ்வமார்கோமான்பாற் சென்றதூஉம்,
அவனைக் கண்டு களித்தற்குக் குழுமிய
தேவேந்திரனையுள்ளிட்ட அத் தேவர்கள் அவனுக்குப்
பழைய முறைமைப்படி யியற்றிய சிறப்புக்களுடனே விடை
கொடுத்துவிட்டதூஉம். அப்பெருமைமிக்க நரவாகனன்
தேவநாட்டினின்றும் வித்தியாதர நாட்டிற்குச்
செனறதூஉம் என்க. (5)
இதுவுமது
308. போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேர்ந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்த னெண்ணியே வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்ட டிதொழும்.
(இ - ள்.) அறவோனாகிய நரவாகனன்
வித்தியாதரருலகிற் சென்று ஒப்பற்ற
பேரின்பத்தே முழுகியிருப்பதூஉம் முற்பிறப்பிலே
யான்செய்த தவப்பயனாலேயே; இதிலையமில்லை என்று
அவ்வுதயணவேந்தன் நீள நினைந்து பார்த்து மீண்டும்
அத்தவமே பேணற்பாலதென்று துணிந்து மாதர் தரும்
காமவின் பத்தைக்கடிந்தொரீஇச் சென்று அருகக்
கடவுளின் திருவுருவினைக் கண்குளிரக் கண்டு அவன்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினன் என்க. (6)
மகளிர் உதயணன் துறவுபூ ணாவகை மயக்குதல்
309. எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார்.
(இ - ள்.) உதயணகுமரனுக்குத் தவம்பண்ண
வேண்டும் என்னும் நினைவு வந்துறுதிப்பட்டமையாலே
அப்பெருமகன் அறமாகிய அத்துறவு மேற்கொள்ளக்
துணிந்தபொழுது வேல்போன்ற கண்ணையுடைய
வாசவதத்தையை யுள்ளிட்ட அவன் தேவிமார் அவள்
மனம் துறவிற் செல்லாது மீண்டும் தம்பாலெய்தித்
தாமீயும் காமவின்பத்தையே நுகரக் கருதித் தமது
இயற்கை யழகினைப் பின்னரும் ஒப்பனையான் மிகுத்து
அம்மன்னனுக்குக் காட்டுவாராயினர் என்க. (7)
|