நோற்ற நோன்பே பயனாக
இப்பிறப்பில் வந்துதவின; ஆதலால், இன்னும் யாம்
எண்ணிய காரியமெல்லாம் இனிது நிறைவேறும்
பொருட்டு அறமாகிய அத்தவத்தையே மேற்கோடல்
வேண்டுமென்று கருதிய மனத்தையுடையனாயினன் என்க. (2)
உதயணன் தவத்தின் பெருமையை நினைத்தல்
கலிவிருத்தம்
305. ஆசை யென்றனக் கருளுந் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெ டுத்ததும்.
(இ - ள்.) உலகெலாம் வழங்குதற்குக்
காரணமான வளவிய புகழையுடைய யூகியானவன் யான்
அவாவியவற்றை யெல்லாம் எனக்குத் தேடித் தருகின்ற
நண்பனாக வமைந்ததூஉம், ஒப்பற்ற வாசவதத்தை
நல்லாள் எனக்கு மனைக்கிழத்தியானதூஉம்,
புகழ்தற்கரிய மக்களை யான் பெற்று வளர்த்ததூஉம்
என்க. (3)
இதுவுமது
306. நரவாக னன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும்.
(இ - ள்.) புகழ்தற் கரிய அம்மக்களுள்
நரவாகனன் புகழாலே ஆக்கமெய்தியதூஉம்,
அந்நரவாகனன்றானும் வெள்ளியம் பொருப்பில்
வித்தியாதரர் வாழுகின்ற நாட்டையெல்லாம்
தனக்குப் பாதுகாவலான தனது சக்கரப்படையாலே வென்று
தன்னடிக்கீழ்க் கொணர்ந்து ஆளாநிற்பதூஉம்,
ஒப்பில்லாத வீரமன்னர்கள் பலரும் அவன்
திருவடியைப் புகழ்ந்தேத்தி அவனைத் தஞ்சம்
புக்கதூஉம் என்க. (4)
இதுவுமது
307. மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்க ணம்விட வண்ணல் போந்ததும்.
|