நகரமாந்தர் செயல்
313. அடிய டிய்யென வாயு தர்செலப்
படுப டுவ் வெனப் பறைகள் கொட்டிட
திடுதி டென்றோலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
(இ - ள்.) படைக்கல மேந்திய
மறவர்கள் புடையுங்கள் என்று ஆரவாரித்து
அக்களிற்றைப் பின் தொடர்ந்து
செல்லாநிற்பவும் ‘படு படு’ என்னும்
ஒலியுண்டாகப் பறைகள் கொட்டி வெருட்டவும்
முரசங்கள் திடுதிடுவென்று முழக்க முண்டாக்கவும்
நகர்வாழ் மாந்தர்கள் மிகவும்
அச்சமடைந்தார்கள். (11)
களிற்றின் செயல்
314. பிடிசில் பாகரைப் பிளந்தே றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே.
(இ - ள்.) அக்களிற்றியானையானது
தன்னைப் பிடிக்கத் துணிந்த பாகர்கள் உடலைக்
கோட்டாற் குத்திப் பிளந்தெறியா நிற்றலாலே
அவர்தம் குடர்மாலைகளையும் தன் கோட்டிலே அணிந்து
கொண்டு கடவுட்டன்மையுடைய பத்திராபதி என்னும்
பிடியானையின் படிமத்தையும் காலாலிடறித்
தேய்த்தற்பொருட்டு மறவர்களால் அலைக்கப்படும்
அக்களிற்றியானை அதனருகிற் சென்று (மறவர்கள்
தடுத்தலாலே). அவ்விடத்தினின்றும் ஓடாநிற்கும்
என்க. கடவுள் யானை என்றது பத்திராபதியின்
படிமத்தை. (12)
நகரமாந்தர் அரசனுக்கறிவித்தல்
315. நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்ந்தி ருக்கென்றான்.
(இ - ள்.) யானைக்கு அஞ்சிய
அந்நகரத்து மாந்தர்கள் பெரிதும் நடுங்கிச்
சென்று அழகிய மலைமுடி போன்று விளங்கும் முடியையும்
புகழையும் உடைய உதயண மன்னனுக்கு, “பெருமானே!
களிற்றியானை பல மாந்தரைக் கொன்ற” தென்று
முறையிட அது கேட்ட மன்னன் வருந்தி “நீயிரெல்லாம்
கோபுரத்தையுடைய நம் மரண்மனை மாடங்களிலே ஏறி
அஞ்சாதிருக்கக் கடவீர்!” என்று பணித்தான்
என்க. (13)
|