பக்கம் : 1270 | | | 2070. | பிறந்தவன் பொறிபுலக் கிவரு மப்புலம் சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும் மறைந்தவை வாயிலா வினைக வீட்டினால் இறந்தவன் பின்னுமன் வியற்கை யெய்துமே. | (இ - ள்.) பிறந்தவன் பொறி - இந் நாற்கதிகளுள் வைத்து ஒன்றிற் பிறந்தவனுடைய மெய் முதலிய பொறிகள், புலக்கு இவரும் - ஊறு முதலிய புலன்களை நுகர்தற்கு அவாவிச் செல்லும், அப்புலம் சிறந்தபின் - அப்புலன்கள் அவனுக்கு எய்திச் சிறப்படைந்தவுடன், விழைவொடு செற்றம் செய்திடும் - அவற்றை மேலும் மேலும் ஆக்கிக் கோடற்கண் விருப்பமும், அவற்றை எய்துதற்கு இடையூறு செய்வார் உளராயவழி வெகுளியும் உடையன ஆவான், மறைந்து அவை வாயிலா - அவ் விருப்பமும் வெகுளியுமாயவற்றுள் தன்னை மறைத்து அவையேயாய் அவற்றால், வினைகள் ஈட்டினால் - நல்வினை தீவினைகளை இறப்ப ஈட்டிக்கொண்டால், இறந்தபின் - அப்பிறவியினின்றும் இறந்த பின்னர், அவ்வியற்கை எய்தும் - அவ்வாறே அவ்வினை காரணமாக ஒரு கதியுட் பிறந்து மேலும் அவ்வினையை ஈட்டும் இயல்பையே எய்துவான், (எ - று.) நாற்கதியினுள் உற்ற உயிர்கள் இறந்தல் பிறத்தலிலே மீண்டும் மீண்டும் சுழன்று வருந்தும் என்றபடி. | (2) | | 2071. | பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான் துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய் உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான் மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே. | (இ - ள்.) பிறவிச் சக்கரம் இது - மீண்டுமீண்டும் பிறந்தும் இறந்தும் சுழல்வதாகிய பிறப்பென்னும் இவ்வின்னல்தரும் உருளையின்கட் பட்டுழல்வதனை, பெரிதும் அஞ்சினான் - மிகவும் அஞ்சுகின்ற ஒருவன், துறவிக்கட் டுணிகுவன் - இவ்வுருளையினின்றும் உய்தற்குரிய நெறியாகிய துறவொழுக்கத்தை மேற்கொள்ளத் துணிவான், துணிந்து - அவ்வாறு துணிந்து பின்னர், தூயனாய் - பொறியடக்கம் முதலியவற்றானே தூயனாகி, உறவிக்கண் அருளுடைய ஒழுக்கம் ஓம்பினான் - மெய்யுணர்ச்சி பொருந்தும் நெறிக்கண்ணின்று அதற்குரிய நல்லொழுக்கத்தைப் பாதுகாத்தவன், மறவிக்கண் இலாததோர் மாட்சி எய்தும் ஏ - மறநெறிகளிலே சென்று எய்துதற்கு இயலாத ஒப்பற்ற மாட்சிமையாகிய நற்காட்சி நன்ஞானங்களைப் பெறுவான், (எ - று.) | | |
|
|