பக்கம் எண் :

பக்கம் : 1269
 
பன்னிரண்டாவது
முத்திச் சருக்கம்
 
இது, பயாபதிமன்னன் வீடுபேறெய்திய வரலாற்றைக் கூறும் பகுதியாம். இதன்கண், அத்துறவி
பயாபதிக்குப் பிறவியிற்பட்டு உயிர்கள் சுழல்வதையும், அப்பிறவிப்பிணியை அஞ்சி
வீடுபேறெய்தும் சான்றோர் மாண்பையும் வீட்டின் இயல்பையும் நன்கு விளக்கிக் கூறுதலும்,
அத்துறவியின் மெய்ம்மொழிகளைச் செவியுற்ற பயாபதி மன்னன் தானும் வீடுபேறெய்தத்
துணிந்தமையும், துணிந்து தன் மக்களை அழைத்து அவர்க்குத் திருமகள் இயல்பையும்
நிலமகள் இயல்பையும் எடுத்துக்கூறி, அவர்க்கு அரசியல் நடத்தும் நெறிகாட்டிப் பின்னர்த்
தான் துறவு பூண எண்ணியதை உரைத்தலும் உரைத்தாங்கே பயாபதி முடிதுறந்து துறவு
மேற்கொள்ளலும், பின்னர் அமைச்சர்கள் துறவு பூணலும், பயாபதியின் தேவியர் துறத்தலும்
விசய திவிட்டர்களும் பிறரும் வருந்தி நகர் எய்துதலும், பிறரும் ஆயிரவர் மன்னர்
துறத்தலும், பயாபதி தவவரசு ஆகித் திகழ்தலும், அவன் கேவல ஞானமெய்தி வீடெய்தலும்
விசயதிவிட்டர் அரசியற் சிறப்பும் பிறவும் கூறப்படும்.
 
 
முத்தி நெறி
2069. இருவகை வினைகளு மில்ல திவ்வழி
வருவகை யிலாதது மறுவின் மாதவர்
பெருவழி யரச்செலும் பெயர்வில் சூளிகைக்
கொருவழி 1யல்லதிங் குரைப்ப தில்லையே.
 
     (இ - ள்.) இருவகை வினைகளும் இல்லது - நல்வினை தீவினைகள் என்னும்
இருவகைப்பட்ட வினைத்தொடர்பற்றதும், இவ்வழி வருவகை இலாததும் - மீண்டும்
இப்பிறப்பிற் குரிய வழிகளிலே வருதலில்லாததும் ஆகிய, மறுவின் மாதவர் - குற்றமற்ற
சிறந்த தவத்தையுடைய துறவிகள், பெருவழியாச் செலும் - தாம் வெல்லுதற்குரிய சிறந்த
வழியாகக்கொண்டு செல்லும், பெயர்வில் சூளிகைக்கு - மீட்சியற்ற முடியுலகாகிய வீட்டுலகிற்
புகுவதற்கு, ஒருவழி யல்லது - ஒரே வழியுளதாகக் கூறுவதல்லது இங்கு உரைப்பது இல்லை
- இவ்வுலகத்தே சான்றோர்களால் கூறப்படும் வழி வேறு இல்லை, (எ - று.)
மீட்சியில்லாத வீட்டினை அடைதற்கு ஒருவழியே உளது வேறு வழியில்லை அதனைக்
கூறுவேன் கேள் என்றார் என்க.
 

(1)


     (பாடம்) 1 யில்லதிங்.