பக்கம் எண் :

பக்கம் : 309
 
  மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரிணையொடு கலவி யார்த்தவே.
 

      (இ - ள்.) புதுமலர்ப் புட்பமா கரண்டம் என்னும் - அன்றலர்ந்த
மலர்களையுடையதான புட்பமாகாண்டம் என்னும் பெயரையுடைய, அப் பொதுமலர்ப்
பூம்பொழில் புகலும் - பலவகை மலர்களும் பொருந்திய அப் பூம்பொழிலில் நுழைதலும்,
மழலை வண்டினம் - இனிய இசையைப்பாடும் வண்டுக் கூட்டங்கள், மதுமலர் பொழிதர -
தேனினை மலர்கள் சிந்த, பொம்என கதுமலர் இணையொடு கலவியார்த்த -
பொம்மென்னும் ஒலியுண்டாமாறு மலர்ந்த மலர்களினிடத்திலே தந்துணையோடு கூடி
ஆரவாரித்தன, (எ - று.)

மருசி புட்பமாகரண்டம் என்னும் பூம்பொழிலையடைந்தபோது அப்பொழில்
வண்டுக்கூட்டத்தின் களியாட்டத்தினால் சிறந்து விளங்கிய தென்க. புதிதாக வருவார்க்குக்
களியாட்டம் நிகழ்த்தி மகிழ்வூட்டுதல் உலக வழக்கு. பொழிலின் இயற்கைத் தன்மையே
மருசிக்கு இன்பூட்டுவதாயிற்று.

வண்டினம் இணையொடு கலவி ஆர்த்தமை. மருசி வந்த காரியமாகிய திருமணச் செயலுக்கு
ஒரு நன்னிமித்தமாதல் உணர்க.

( 192 )